TamilsGuide

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் பலியான 8 புலம்பெயர்வோர் - சமீபத்திய தகவல்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியர்களான பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான தக்‌ஷாபென் (45), தம்பதியரின் மகளான விதிபென் (23) மற்றும் மகன் மித்குமார் (20) ஆகியோர், ஒரு லட்சம் டொலர்கள் கொடுத்து கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றார்கள். 

ஆனால், ஆறு நாட்களுக்குப் பிறகு அந்தக் குடும்பம் செயின்ட் லாரன்ஸ் நதியில், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளுடன் சடலமாகத்தான் மீட்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எட்டு பயணிகளுடன் படகின் சாரதியான கேஸி ஓக்ஸ் (Casey Oakes) என்பவரும் உயிரிழந்தார்.

இதற்கிடையில், அந்த வழக்கில் தொடர்புடைய திமோத்தி ஓக்ஸ் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த திமோத்தி, படகு விபத்தில் உயிரிழந்த கேஸி ஓக்ஸின் சகோதரர் ஆவார். 

அத்துடன், திமோத்தி, இந்தியர்களையும் ரொமேனியா நாட்டவர்களையும் கனடாவிலிருந்து நியூயார்க்குக்கு கடத்தும் கும்பலில் முக்கிய பங்கு வகிப்பவர் ஆவார்.

மேலும், கடத்துவதற்காக அழைத்துவரப்படும் புலம்பெயர்வோரை, ஆளுக்கு 1,000 டொலர்கள் வசூலித்து, ஒன்ராறியோவிலுள்ள தனது வீட்டில் திமோத்தி தங்கவைப்பதுண்டு என அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவல் கூறுகிறது.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு, 29ஆம் திகதி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் உட்பட 9 பேர் பலியான வழக்கில், தான் குற்றவாளி என திமோத்தி தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், திமோத்திக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment