பிப்ரவரி 28 தொடங்கிய ஈரான் - அமெரிக்கா போர் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் நிரந்தர முடிவின்றி நீடித்து வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
ஈரானின் நிபந்தனைகள் 'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை' என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய போர் நிறுத்த அறிக்கையில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை மூன்றாம் நாட்டிற்கு மாற்ற ஒப்புக்கொண்டது.
ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அந்த யுரேனியத்தைத் திரும்பத் தர வேண்டும் என்ற உறுதிமொழியை ஈரான் கோரியுள்ளது.
மேலும் அமெரிக்கா தங்களுக்குப் போர் இழப்பீடு வழங்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி மீது தங்களுக்கு முழு இறையாண்மை வழங்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்டவற்றை கோரியுள்ளதாக வால் ஸ்டீரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில் தனது 'ட்ரூத் சோஷியல்'தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரான் பிரதிநிதிகளின் பதிலை வாசித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் அணுசக்தித் திட்டம் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், "எதிரியிடம் நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம். பேச்சுவார்த்தை என்பது சரணடைதல் அல்ல," எனத் தெரிவித்துள்ளார்.


