அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கக் குடிமக்களின் புதிய பாஸ்போர்ட்களில் அதிபர் டிரம்பின் முகம் இடம்பெறவுள்ளது.
பாஸ்போர்ட்டின் உட்பக்கத்தில் சுதந்திரப் பிரகடன உரையின் நடுவே டிரம்பின் புகைப்படம் மற்றும் தங்க நிறத்தில் அவரது கையெழுத்து அச்சிடப்படும் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
அதேபோல், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு பதவியில் இருக்கும் அதிபரின் கையெழுத்து டாலர் நோட்டுகளில் (U.S. Paper Currency) இடம்பெற உள்ளது.
வழக்கமாக கருவூல அதிகாரிகளின் கையெழுத்து மட்டுமே இருக்கும் நிலையில், இனி வரவிருக்கும் டாலர் தாள்களில் டிரம்பின் பெயர் மற்றும் கையெழுத்து அச்சிடப்படும்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி-யில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்களில் டிரம்பின் பிரம்மாண்ட பேனர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
நீதித்துறை (DOJ), தொழிலாளர் துறை (DOL) மற்றும் விவசாயத் துறை (USDA) ஆகிய கட்டிடங்களின் முகப்பில் ஆபிரகாம் லிங்கன் மற்றும் தியோடர் ரூஸ்வெல்ட் போன்ற வரலாற்றுத் தலைவர்களின் படங்களுக்கு இணையாக டிரம்பின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ‘ஜான் எஃப். கென்னடி கலை மையம்’ (Kennedy Center) தற்போது ‘டொனால்ட் ஜே. டிரம்ப் மற்றும் ஜான் எஃப். கென்னடி நினைவக கலை மையம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்காக டிரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ள புதிய இணையதளம் TrumpRx.gov என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர, குழந்தைகளுக்கு முதலீடு செய்வதற்காகத் தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு Trump Accounts என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
செல்வந்தர்களான வெளிநாட்டினர் அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கும் சிறப்பு விசா திட்டம் Trump Gold Card என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் தேசியப் பூங்காக்களுக்கான 2026-ஆம் ஆண்டு நுழைவுச் சீட்டுகளில் ஜார்ஜ் வாஷிங்டனுடன் டிரம்பின் முகமும் அச்சிடப்பட்டுள்ளது


