இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் விண்ணப்பித்த முன்னாள் பணியாளர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
50 சதவீத நஷ்டஈட்டுத் தொகை
பணியாளர்களுக்கான மொத்த நஷ்டஈட்டுத் தொகையில் 50 சதவீதத்தை திறைசேரி நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 50 சதவீதத் தொகை குறுகிய காலத்திற்குள் வழங்கப்படும். முதற்கட்ட 50 சதவீதத் தொகையை இந்த மாதம் 15-ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் அதற்கு அனுமதி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு 6 புதிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், இதற்கு இணங்காத சுமார் 2,000இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த மார்ச் 09 அன்று விருப்ப ஓய்வு பெற்றனர்.
முறையான இழப்பீட்டுத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இருந்தமையால், ஊழியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியிருந்தது.
தற்போது அமைச்சரவை அனுமதியுடன் இந்த மாதம் 15ஆம் திகதிக்குள் முதற்கட்ட 50 சதவீத நஷ்டஈட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


