தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதி ஒருவர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த மூன்று சிறைக் காவலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பிக்கும் முயற்சி தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
குறித்த கைதி சிறை வளாகத்திலிருந்து தப்பி ஓடியதாகவும், பின்னர் பொரளை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று அவரை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
கைது நடவடிக்கையின்போது கைதிக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்திலேயே மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து அந்த கைதி கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ரூ. 5,000 அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், மூன்று மாத சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தார்.
உயிரிழந்தவரின் உடவிறனர்கள், சிறை அதிகாரிகளால் அவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள நிலையில், பொரளை காவல்துறையின் இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (மே 4) பொரளை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ஏப்ரல் 27 அன்று மெகசின் சிறையில் சிறை அதிகாரியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மற்றொரு கைதி உயிரிழந்தது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.


