TamilsGuide

ஜெர்மனியில் இருந்து 5000 ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் அமெரிக்கா.. நேட்டோ அதிர்ச்சி 

ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் டிரம்ப் அரசின் முடிவால் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஈரான் போரில் ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தனது விரக்தியை வெளிப்படுத்தி வந்த சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், இந்த 5,000 ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பணி அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் நிலையை மறுஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவு ஐரோப்பிய நாடுகள் தங்களது பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார்.

2025 டிசம்பர் நிலவரப்படி, ஜெர்மனியில் 36,436 அமெரிக்க வீரர்கள் இருந்தனர். இத்தாலியில் 12,662 பேரும், ஸ்பெயினில் 3,814 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறி, அடுத்த வாரம் முதல் ஐரோப்பிய கார்கள் மற்றும் டிரக்குகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஜெர்மன் நிறுவனங்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும்.


 

Leave a comment

Comment