ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை.....
சினிமா
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது. ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும். அவருக்கு அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால், எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடியே, “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்
கடைசியாக ஒரு முறை காமராஜரை தனது வீட்டு விருந்துக்கு அழைத்து விடுவது என்கிற எண்ணத்தில் சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார். அவரை வழியனுப்பும்போது தனது வீட்டு விருந்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர்.
அதே புன்னகை மாறாமல், “ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன். ரெண்டு இட்லி, தயிர் சோறுதான் எனக்கு சரிப்படும். உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும். அதுக்கு நான் எங்கே போறது” என்று கூற, ஆடிப்போனார் எம்ஜிஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை கைக்கூப்பி வணங்கி விட்டாராம் மக்கள் திலகம் எம்ஜிஆர். அதுமுதல் காமராஜரை தனது வீட்டு விருந்துக்கு அவர் அழைப்பதில்லை!
இப்படியும் ஒரு முதல்வர் நமது தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்குக் கிடைப்பாரா? என்பதே தமிழக மக்களின் கனவாய் உள்ளது.
Prashantha Kumar






















