TamilsGuide

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள்,  மோசடியாளர்கள்,  ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம்  இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் தனது நோக்கத்தில் இருந்து தவறாது. ஜனாதிபதி அநுர மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று இலங்கைக் கிரிக்கெட் சபை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜபக்சாக்களின் மிக நெருங்கிய சகாவான சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். ஊழல் மோசடிக்கு எதிராக ரணில் மீதும் நட வடிக்கை எடுக்கப்பட்டது. இதையெல்லாம் எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் செய்தோம். ஊழல் வாதிகளையும், மோசடியாளர்களையும் தண்டித்தோம்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் தெற்கில் இடம்பெறுவதைப்போன்று வடக்கில் ஏன் இடம்பெறுவதில்லை? என்று எம்மிடம் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் கேள்வி நியாயமானது. கவலைப்பட வேண்டாம். தெற்கில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அவ்வாறே,  வடக்கிலுள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள்.

வடமாகாணத்தில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்கிறோம். அவற்றை நாங்கள் சடுதியாகத் தீர்த்துவைக்க முற்பட்டால், வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகள் மேலெழும்ப எத்தனிப்பார்கள்.

எனவே,  நிதானமான முறையிலேயே இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டும். மோசடியாளர்களும்,  சமூக விரோதிகளும் சிறைக்குச் செல்லும் காலமாக அடுத்த இரண்டு வருடங்கள் அமையும். எனவே நம்பிக்கையுடன் இருக்குமாறு மக்களைக் கோருகின்றோம் – என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment