வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தான்சல்களை பதிவு செய்யும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
தன்சல்களை நடத்துவது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வினவி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நேற்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் 382 தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக சமில் முத்துகுட குறிப்பிட்டார்.
அந்தத் தன்சல்களும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நேற்று (1) வெசாக் பௌர்ணமி தினமாக முன்னதாகக் கருதப்பட்டது.
இருப்பினும், மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் படி, மே 30ஆம் திகதி வரும் பௌர்ணமி தினத்தை ‘வெசாக் பௌர்ணமி’ தினமாக பெயரிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.


