அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருவதாக, கத்தாரின் ஹமாத் பின் கலீஃபா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைத் துறை மூத்த பேராசிரியர் சுல்தான் பரகத் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.
அத்துடன், சீனாவும் திரைக்குப் பின்னால் அமைதியாகச் செயல்பட்டு தனது செல்வாக்கைச் செலுத்தி வருவதாக பேராசிரியர் சுல்தான் பராகத் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் "மிகவும் பாதிக்கப்பட்ட" மற்றும் "இயல்பு நிலைக்குத் திரும்புவதை ஓரளவு சுவைத்த" வளைகுடா நாடுகள் மற்றும் அண்டை நாடுகள், போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஈரான் தனது கோரிக்கைகளை மாற்றியமைத்துள்ளது. தற்போது தடைகள் மற்றும் இழப்பீடுகள் பற்றிய பேச்சைத் தவிர்த்துவிட்டு, ஹோர்முஸ் நீரிணையை முக்கியப் பிரச்சினையாக முன்வைக்க முயற்சித்து வருகிறது.
இரு நாடுகளும் பெரிய நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகும் வரை, தற்போதுள்ள நிலையையாவது தக்கவைத்துக் கொள்ளவே உலக நாடுகள் முயன்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


