TamilsGuide

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

இலங்கையில் அண்மையில் தாக்கம் ஏற்படுத்திய டித்வா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்கும் நோக்கில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று (30) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வு மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் பயிற்சி மண்டபத்தில், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதி விவசாயப் பணிப்பாளர்,  உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

டித்வா புயலினால் விவசாய உபகரணங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்த நிலையில், மேட்டுநிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீள உருவாக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கான நிதி ஆதரவு UNOPS நிறுவனத்தின், விருத்தித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.

விதைகள் வழங்கும் நிகழ்விற்கு முன்னதாக, விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஜெஸ்மன் மார்க்  வழங்கிய இந்த பயிற்சியில், தரமான விதைத் தெரிவு மற்றும் விதை மேலாண்மை, பயிர் பராமரிப்பு முறைகள் (களை அகற்றுதல், உரப் பயன்பாடு), நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு நுட்பங்கள்,
அதிக விளைச்சலைப் பெறுவதற்கான அறுவடை முறைகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் நிறைவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பயனாளிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.
 

Leave a comment

Comment