TamilsGuide

டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டொராண்டோவில் உள்ள வாகன நிறுத்த மீட்டர்களில் (Parking meters) மோசடி கும்பல் போலி QR குறியீடுகளை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக டொராண்டோ காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மைய வாரங்களில் இத்தகைய மூன்று புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து நிதி குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்துவதற்காக இந்த போலி QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும்போது, அவை உண்மையான இணையதளம் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன.

அங்கு 7 டாலர் கட்டணம் செலுத்துவதாக நினைத்து தங்கள் தகவல்களைப் பதிவிடும் நபர்களின் கணக்கிலிருந்து சுமார் 2,000 டாலர் வரை திருடப்படுவதாக காவல்துறை அதிகாரி லாரா பிராபண்ட் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற மோசடி குறித்து 'பைக் ஷேர் டொராண்டோ' (Bike Share Toronto) நிறுவனமும் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களுடைய மிதிவண்டிகளில் உள்ள அதிகாரப்பூர்வ QR குறியீடுகளின் மேல் மோசடி நபர்கள் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகவும், எக்காரணத்தைக் கொண்டும் QR குறியீடு மூலம் பணம் செலுத்தக் கேட்பதில்லை என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, வாகன நிறுத்த மீட்டர்கள் அல்லது பொது இடங்களில் உள்ள QR குறியீடுகளைப் பயன்படுத்தும்போது அவை சிதைக்கப்பட்டுள்ளதா அல்லது புதிதாக ஒட்டப்பட்டுள்ளதா என்பதை கவனமாகப் பார்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய குறியீடுகளைத் தவிர்க்குமாறும், எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
 

Leave a comment

Comment