• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிப்புப் பேரரசன் தன் ஆளுமையால் நிகழ்த்திய அதிகாரப் பிரகடனம் - தங்கப்பதக்கம்

சினிமா

திரைப்பரப்பில் 'எஸ்பி சௌத்ரி' என்பது வெறும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரல்ல; அது ஒரு நடிப்புப் பேரரசன் தன் ஆளுமையால் நிகழ்த்திய 'அதிகாரப் பிரகடனம்'. 'தங்கப்பதக்கம்' எனும் அந்தப் பிம்பக் கோர்ப்பில், ஒவ்வொரு பிரேமும் வெறும் காட்சிகளாக நகராமல், ஒரு சரித்திரத்தின் தழும்புகளாகவே மாறின.
பொதுவாக, ஒரு போர் வீரனின் வீரம் அவன் ஏந்தும் ஆயுதத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், இந்தக் காட்சியில் ஒரு மகா நடிகனின் வீரம், அவர் உதிர்க்கும் மௌனத்திலும், அந்த மௌனத்தைக் கிழிக்கும் மிக நுணுக்கமான உடல்மொழியிலும் உறைந்திருக்கிறது. இரண்டரை நிமிடக் காலவெளிக்குள் பன்னிரண்டு ஷாட்டுகளால் நெய்யப்பட்ட இந்தத் திரைக்கவிதை, தொழில்நுட்பம் வளர்ந்திராத அந்தக் காலத்திலேயே கேமரா கோணங்களால் எப்படி ஒரு மனிதனின் அகப் போராட்டத்தை அணு அணுவாகப் படம் பிடித்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா ?

வழக்கமான அடுக்குமொழி வசனங்கள் இன்றி, ஒரு தேர்ந்த சிற்பி கல்லைச் செதுக்குவதைப் போல, நடிகர் திலகம் தன் ஒவ்வொரு அசைவாலும் எஸ்பி சௌத்ரியின் ஆன்மாவை நமக்குள் கடத்தும் அந்த ரசவாதமே இக் காட்சி.

தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ காவல்துறை அதிகாரிகள் வந்து போயிருக்கலாம். ஆனால், 'எஸ்பி சௌத்ரி' எனும் பெயர் இன்றும் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. 'உணர்ச்சிகளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இடையே நடந்த ஒரு மௌன யுத்தத்தை, அந்த இரண்டரை நிமிடக் காட்சியில் சௌத்ரி பதித்த முத்திரை இது...

காட்சியின் தொடக்கம்:
சிரிப்பும் பயமும்...
மாடிப்படிகளில் ஒரு மெல்லிய பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
அங்கே மேலே ஸ்ரீகாந்த் கே ஆர் விஜயா..
"மாமா, சர்க்கரைக்கு காபி போதுமா?" - பிரமீளாவின் இந்தக் கேள்விக்கு சௌத்ரியின் பதில் ஒரு சிரிப்பு. ஆனால், அது சாதாரணச் சிரிப்பல்ல; அதிகாரத்தின் நிழல் படிந்த சிரிப்பு. அந்தச் சிரிப்பின் கனம் தாங்காமல் பிரமீளா ஓடிவிட, அங்கிருந்து தொடங்குகிறது அந்த 12 ஷாட்டுகள் கொண்ட உணர்ச்சிப் பிரளயம்.

ஷாட் 1 & 2: அந்த ஒற்றை வார்த்தை - "என்னப்பா?"
டீ கப்பை மேஜையில் வைக்கும்போது எஸ்பி சௌத்ரி எனும் அதிகாரியை நாம் பார்க்கிறோம். ஆனால், ஸ்ரீகாந்த் "உங்ககிட்ட பேசணும்" என்று சொல்லும்போது சட்டென்று திரும்பும் அந்த 4 விநாடி ஷாட்டில் ஒரு 'தந்தை' வெளிப்படுகிறார். ஆச்சரியமும், அதிகாரமும் கலந்த அந்த "என்னப்பா?" என்ற ஒற்றை வார்த்தை, சிவாஜியின் ஆளுமைக்குச் சாட்சி.

ஷாட் 3: சட்டையினுள் கை... ஒரு தந்தையின் அசைவு...
ஸ்ரீகாந்த் வீடு பார்த்துவிட்டதாகச் சொல்ல, சௌத்ரி கீழே இறங்கி வருகிறார். சீருடையில் இருந்தாலும் பெல்ட் கழற்றப்பட்ட நிலையில், ஒரு சாதாரணத் தந்தையாக அவர் நடந்து வரும் அழகே தனி. "விலைக்கா?" என அவர் கேட்க, "இல்லை வாடகைக்கு" என ஸ்ரீகாந்த் சொல்லும் அந்த உரையாடலில், மகனின் பிரிவை அறியும் அந்த ஒரு நொடியில் ஒரு தந்தையின் அக்கறை தெரிகிறது.
சட்டையின் கீழ் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு அவர் நடக்கும் அந்த 'ஸ்டைல் வாக்' சிவாஜிக்கே உரித்தான ஸ்டைல்.

ஷாட் 4: அதிர்ச்சியின் இசை (23 விநாடிகள்)
காட்சி சூடுபிடிக்கிறது. "நாளைக்கு நானும் உங்கம்மாவும் அங்க போறோம்" என்று சௌத்ரி சொல்ல, ஸ்ரீகாந்த் "அப்பா!" எனத் திரும்புகிறார். அங்கே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பிரவேசிக்கிறார். அதுவரை மௌனமாக இருந்த பின்னணி இசை, ஒரு 'டார்ர்ர்' என்ற ஒலியுடன் அதிர்ச்சியைப் பதிவு செய்கிறது. "வீடு உங்களுக்கு இல்லை, எனக்கும் விமலாவுக்கும்!" - ஸ்ரீகாந்தின் இந்தச் சொற்கள் சௌத்ரியின் முகத்தில் ஒரு அயர்ச்சியை வரவழைக்கின்றன. அது ஒரு மின்னல் கீற்று போல வந்து மறைகிறது. அந்த நொடியிலும் எஸ்பி சௌத்ரியின் கம்பீரம் குலையவில்லை.

ஷாட் 5 & 6: மாடிப்படிகளில் ஒரு மௌன யுத்தம்...
சிவாஜி மாடிப்படிகளில் ஏற, கேமரா அவரைப் பின்தொடர்கிறது. "இது உன் பாட்டனார் வீடு, உனக்குத் தானே சேரணும்" என அவர் சொல்ல, "எனக்கு இந்த வீடு தேவையில்லை" என ஸ்ரீகாந்த் மறுக்கிறார். அடுத்த ஷாட்டில் கேமரா கோணம் மாறுகிறது. கீழே இருந்து மேலே பார்க்கும் கேமரா, சிவாஜியின் பிரம்மாண்டத்தை இன்னும் கூட்டுகிறது. ஒரு காலை மேலே, ஒரு காலை கீழே வைத்து அவர் நிற்கும் அந்தத் தோரணை... அடடா!
"ஏம்பா, எம் பக்கம் திரும்பிப் பேசு" என அவர் கைநீட்டும் ஸ்டைல் காலத்தால் அழியாதது.
அதற்கு ஸ்ரீகாந்த் ,நீங்களும் என் பக்கம் திரும்பிட்டா பிரச்சினை இல்லையே ,என்ற தொனியில் பேசுவார்.

ஷாட் 8: சரித்திர வசனம் (4 விநாடிகள்)
இந்தக் காட்சியின் மகுடம் இந்த ஷாட்தான்.
"மத்தவங்களை எம் பக்கம் திருப்பித்தான் பழக்கம்... நான் மத்தவங்க பக்கம் திரும்பிப் பழக்கமில்லே!"
அந்த வசனத்தைச் சொல்லும்போது அவர் காட்டும் கையின் சைகையும், முகபாவமும் தமிழ் சினிமாவின் 'மாஸ்' காட்சி. வெறும் 4 விநாடிகளில் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த சுபாவத்தையும் செதுக்கி இருப்பார் நடிகர் திலகம்.

ஷாட் 11 & 12: அந்த உணர்ச்சிகரமான முடிவு...
காட்சியின் மிக நீளமான ஷாட். ஸ்ரீகாந்த் தன் குமுறல்களைக் கொட்டுகிறார். "சின்ன வயசுல இருந்தே சுதந்திரம் இல்லை... என்னை ஒரு குற்றவாளியாவே பார்த்தீங்க." இதையெல்லாம் கேட்கும்போது சிவாஜி காட்டும் அந்த மௌனம் வலிமையானது. சட்டையின் பட்டன்களைக் கழற்றிக்கொண்டே, மூக்கைத் தடவிக்கொண்டு அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன், ஒரு தந்தை தன் தோல்வியை உள்வாங்கிக்கொள்ளும் தருணம்.
இறுதியாக, கிரேன் ஷாட்டில் கேமரா மேலே எழும்புகிறது.
"நான் வேலி போட்டது செடிக்குதாம்ப்பா... மரத்துக்கு இல்லே!"
இந்த வசனத்திற்குப் பின் எஸ்பி சௌத்ரி எனும் இரும்பு மனிதன் உடைந்து போகிறார். "என் மகனைப் பிரிஞ்சு வாழற சக்தி என்கிட்ட இல்லேப்பா" எனச் சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்லும்போது, எம்.எஸ்.வி "Twinkle Twinkle Little Star" மெட்டை ஒரு உருக்கமான மெலடியாக மாற்றி நம் கண்களைக் கசிய வைப்பார்.

வசனங்கள் இல்லாத இடங்களை இசையாலும், இசை இல்லாத இடங்களை நடிப்பாலும் நிரப்பிய ஒரு காவியக் காட்சி இது. கேமரா கோணங்கள், எடிட்டிங், பின்னணி இசை என அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து 'தங்கப்பதக்கம்' காவியம் உருவானது. நடிகர் திலகத்தின் அந்த இரண்டரை நிமிட 'சைலண்ட்' மற்றும் 'வயலண்ட்' நடிப்பு என்றும் நம் நினைவுகளில் 'ஸ்டைலாக' நிலைத்திருக்கும்!

செந்தில்வேல் சிவராஜ்
 

Leave a Reply