TamilsGuide

நிதி நெருக்கடி - முடங்கும் அபாயத்தில் இந்திய விமான போக்குவரத்துத் துறை

இந்திய விமான போக்குவரத்துத் துறை முடங்கும் அபாயத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலானது இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுளதாவது,

அந்தவகையில் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை "தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும், சில நிறுவனங்கள் "செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

மே 1 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்னதாக, அவசர விலை நிவாரணத்தை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டும் இலாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 11-18 டொலரிலிருந்து தற்போது 130 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது மசகு எண்ணெய் விலையை விட (பீப்பாய் ஒன்றுக்கு 72 டொலரிலிருந்து 118 டொலராக உயர்வு) மிக வேகமாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

கொவிட்-19 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற "கிரெக் பேண்ட்" விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்துமாறு இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.

இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நியாயமான இலாபத்தைப் பெறுவதுடன், வானூர்தி நிறுவனங்களின் சுமையைக் குறைக்க முடியும். ஏப்ரல் 1 அன்று உள்நாட்டு வானூர்தி எரிபொருள் விலையை 25 வீதம் மட்டுமே உயர்த்திய அரசாங்கம், சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 100 வீதம் அதிகரித்துள்ளது.

இதனால் சர்வதேச சேவைகளை நடத்துவது சாத்தியமற்றதாகிவிட்டதோடு, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வானூர்தி எரிபொருளுக்கு தற்போது 11 வீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதுடன், மாநில அளவிலான மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் 29 வீதம் மற்றும் டெல்லியில் 25 வீத வரி வசூலிக்கப்படுகிறது. மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய மையங்களிலும் 16 வீதம் முதல் 20 வீத வரை வரி காணப்படுகிறது.

இந்தியாவின் 95 சதவீத விமானப் போக்குவரத்துச் சந்தையைக் கொண்டுள்ள இந்த நிறுவனங்கள், போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க கலால் வரி மற்றும் வற் வரி குறைப்பு போன்ற அவசர நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Leave a comment

Comment