காணாமல்போன யாழ் ரீகல் திரை அரங்கம் !
சினிமா
யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில், எழுபதுகளில் , மாணவர்கள், இளவட்டங்கள், நடுத்தரவ வயது ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக விளங்கிய திரையரங்கு 'றீகல்'. காரணம்: அதிகமாக ஆங்கிலத்திரைப்படங்களை அங்கு திரையிடுவார்கள். அதிகமாகப் பாடசாலை மாணவர்களே இத்திரையரங்கை நோக்கிப்படையெடுப்பார்கள். பலரும் கலரி, இரண்டாம் வகுப்பு டிக்கற்தான் எடுப்பார்கள். பின்னர் இந்நிலை மாறி அவ்வப்போது பழைய திரைப்படங்களையும் போடத்தொடங்கினார்கள். பெண்களும் இத்திரையரங்கு நோக்கி வரத்தொடங்கினார்கள். இருந்தாலும் அதிகமாக இங்கு படம் பார்க்கச் செல்பவர்கள் மாணவர்களும், இளவட்டங்களும், நடுத்தரவ வயது ஆண்களுமே. 'பாவை விளக்கு' திரைப்படத்தை நான் இங்குதான் பார்த்தேன்.
இங்கு நான் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள் அனைத்தையுமே கூற முடியாத அளவுக்கு எண்ணிக்கையில் அதிகம். நினைவில் நிற்பவை: கசன்ரா குரொஸ்ஸிங் (The Cassandra Crossing) . கிறகரி பெக், ஓமர் ஷெரீஃப், டெலி சவிலாஸ் நடிப்பில் வெளியான் மக்கனாஸ் கோல்ட் (Mackenna's Gold)ம, ஆஃப்ரிகன் சஃபாரி, அந்தனி குயீன், ஓமர் ஷெரீஃப் போன்ற நடிகர்கள் பலரின் நடிப்பில் உருவான, மூன்றரை மணித்தியால நீளமுள்ள லாரன்ஸ் ஆஃப் அரேபியா (Lawrence of Arabia).. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். இள வட்டங்கள் மத்தியில் றீகல் புகழ்பெற்றிருந்ததற்கு இன்னுமொரு காரணமுமிருந்தது. அங்குள்ள 'கண்டீ'னில் லயன் லாகர், திறீ கொயின்ஸ் பியர் வகைகளை (முழுப்போத்தல் சுமார் ரூபா 6; அரைப்போத்தல் ரூபா 3) விற்பார்ர்கள். பியர் குடித்து விட்டுப்படம் பார்க்கலாம். றீகல் திரையரங்கு அமைந்திருந்த இடம் எனக்கு மிகவும் பிடித்த சூழல். யாழ் முற்றவெளி, கோட்டை, பண்ணைக் கடல், திறந்தவெளி அரங்கு ஆகியவற்றை அண்மித்திருந்த பகுதியில், யாழ் பஸ் நிலையத்துக்கு அண்மையிலிருந்தது. காற்று வீசும் சூழலில் றீகலுக்குச் செல்வது எனக்குப்பிடித்த விடயம். இரவில் படம் முடிந்து வெளிவருகையில் பரந்த வெளியும், நட்சத்திரங்கள் கொட்
டிக்கிடக்கும் இரவு வானும் நெஞ்சை அள்ளுவன. றீகல் திரையரங்குக்கும் , யாழ் பஸ் நிலையத்தையுமிணைத்துச் செல்லும் வீதியில் ஒரு தேநீர்க் கடை இருந்தது. நண்பர்களுடன் அவ்வழியால் செல்லும்போது அடிக்கடி செல்லும் தேநீர்க்கடை அது.
யாழ் நீகல் என்றதும் நினைவுக்கு வருமொருவர் சார்ஜண்ட் கணேசன் (பெயர் இவ்விதம்தான் நினைவிலுள்ளது) . ஆறடிக்கும் உயரமான, கட்டப்பொம்மன் மீசையுடன் கூடிய ஒருவர். அக்காலகட்டத்தில் பொலிஸார் பான்ட்ஸ் போடுவதில்லை. அரை காற்சட்டைதான் போடுவதுதான் வழக்கம். ஆனால் தமிழகத்துப் பொலிஸார் போல் பாவாடைக் காற்சட்டை போடாமால் அழகாக உடலுடன் அளவெடுத்துத் உருவாக்கப்பட்ட போலிஸ் காற்சட்டை. அவ்விதமணிந்துவரும் அவரின் தோற்றம் ஒருமுறை பார்த்தாலும் மறக்க முடியாத தோற்றமாக விளங்கியது. இவரை நான் ஒருபோதும் மறக்க முடியாது.. நன்றி . வ. ந. கிரிதரன் அவர்களுக்கு ,






















