அமெரிக்காவின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ராணுவ விமானங்களை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்ததாக, 21 வயதான சீன மாணவர் தியான்ரூய் லியாங் (Tianrui Liang) என்பவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று வரும் இவர், கடந்த மார்ச் மாதம் கனடாவின் வான்கூவர் வழியாக சாலை மார்க்கமாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.
தனது பயணத்தின் போது, நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள 'ஓஃபுட்' (Offutt) விமானப்படை தளத்திற்கு அருகே நின்றபடி, அமெரிக்காவின் மிக ரகசியமான மற்றும் அதிநவீன விமானங்களை இவர் படம் பிடித்துள்ளார்.
குறிப்பாக, உளவு வேலைகளுக்குப் பயன்படும் RC-135 விமானம் மற்றும் தேசிய அவசர காலங்களில் அதிபரின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும் "டூம்ஸ்டே பிளேன்" (Doomsday Plane) எனப்படும் E-4B விமானத்தையும் இவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அணு ஆயுதத் தடுப்பு மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த ஓஃபுட் விமானப்படை தளம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
FBI அதிகாரிகளிடம் லியாங் அளித்த வாக்குமூலத்தில், இந்த விமானங்களைப் படம் பிடித்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்த நிலையில், லியாங் அமெரிக்காவை விட்டு வெளியேற முயன்றபோது நியூயார்க் விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
ராணுவ ரகசியங்களைப் படம் பிடித்தது சட்டப்படி குற்றம் என்று தனக்குத் தெரியும் என அவர் கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது லியாங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், விசாரணை முடிவில் மேலும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என அமெரிக்க நீதித்துறை எச்சரித்துள்ளது.


