TamilsGuide

Rebuilding Sri Lanka நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நிதியம் பாதுகாப்பாக இருப்பதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) கூறுவதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிதியங்களைத் தவிர ஏனையவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறிருக்கையில், இந்த நிதியம் முறையாக சட்டமாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிதியத்தில், சுமார் 9,583 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இருப்பினும், அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களையே வழங்கி வருவதாகவும், இந்த நிதியம் தொடர்பாக அதிகாரிகள் “பணியாற்றிக் கொண்டிருப்பதாக” கூறுவதிலிருந்தே இது இன்னும் சட்டபூர்வமாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என Harsha de Silva குற்றம் சாட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment