யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் மீது தமிழக மீனர்கள் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸில் பதிவிட்ட அவர்,
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களால் நமது மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சிகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
அரசு தாமதமின்றித் தலையிட்டு, அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நான் வன்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவம், வட மாகாணத்தைச் சேர்ந்த நமது மீனவர்களைச் சிறப்பாகப் பாதுகாக்க, வலுவான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்பதன் அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் பிரச்சினைகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்.
ஆனால், தமிழக காவல்துறையினர் முன்னிலையில் கூட, தமிழக மண்ணில் நமது மீனவர்கள் தாக்கப்பட்டபோது மௌனம் காக்கின்றனர் என்றும் அவர் கவலைை வெளியிட்டார்.
இந்தியச் செய்திச் சேவைகளின் தகவலின்படி, நடுக்கடலில் தமிழக மீனவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த 27 வயதான இலங்கை நாட்டவர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களால் பிடிக்கப்பட்டு திங்களன்று வேதாரண்யத்தில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த டி. தயானஸ் (27 வயது) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருடன் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஓராத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


