• Welcome to TamilsGuide
செய்திகள் 1

95 வயதிலும் படம் இயக்கும் மூத்த பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ்

சினிமா

70களில் ஆரம்பத்தில் இயக்குனராக வந்தவர் சிங்கிதம் சீனிவாசராவ் .இன்னைக்கு வரைக்கும் இயக்குனராக அதுவும் 95 வயதில் இயக்குனராக பரபரப்பாக பம்பரமாக படம் இயக்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆகணும். தயாரிப்பாளர் நாக் அஸ்வின் தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தை இவர்தான் இயக்குகிறார். இது இவரின் 61 வது படமாகும். தற்போதைக்கு sro 61 என்ற பெயரில் மட்டும் உள்ளது இன்னும் பெயர் வைக்கவில்லை. இது இவர் 40 வருடத்துக்கு முன் யோசித்த கதையாம், அதை இப்போ செயல்படுத்துகிறார்.

தமிழில் சிங்கிதம் சீனிவாசராவை தமிழ் ரசிகர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி செய்தவர் கமல்ஹாசன் தான், தன்னுடைய 100வது படமான ராஜபார்வையை இயக்க வைத்து வியக்க வைத்தார். சிங்கிதம் சீனிவாசராவ் தமிழில் 1973ல் வெளிவந்த மூதறிஞர் ராஜாஜி எழுதிய கதையான திக்கற்ற பார்வதி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தேசிய விருதை பெற்றது. இவர் முதன் முதல் திரைத்துறைக்கே அறிமுகமான காலம் 1972ல்   நீட்டி நிஜயிட்டி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன் பின் 1973ல் திக்கற்ற பார்வதி மூலம் புகழ்பெற்ற சிங்கிதம் சீனிவாசராவ், அந்த படம் தேசிய விருதை பெற்றாலும், அதன் பின் 7 வருடங்கள் கழித்தே தமிழில் 1980ல்  படம் செய்கிறார், அதுவும் கமல்ஹாசனின் 100வது படம் ராஜபார்வை.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் படங்கள் செய்துள்ளார், இதில் தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்கள் தான் இவர் அதிகம் செய்துள்ளார்.

வித்யாசமான நோக்கத்துடன் மெளன படமாக இவர் கன்னடத்தில் இயக்கிய புஷ்பக விமானம் படம் இவருக்கு நல்ல பெயரை கொடுத்தது தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் புஷ்பக் என ஹிந்தியிலும், தமிழில் பேசும்படம் என்றும் வந்தது. படம் நின்னு பேசும் ஆனா படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் பேச மாட்டார்கள் மெளன படமாக போனது.

கமல்ஹாசனின் மெகா ஹிட் படமான அபூர்வ சகோதர்கள் படம், அதன் பிறகு மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா போன்ற படங்கள் எல்லாமே நன்கு ரசிக்க கூடியவை.

இவரின் கமல்ஹாசன் படத்தை தவிர்த்து விட்டு பார்த்தால், பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு, தமிழில்,இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மாயா ஜால படங்கள்,  வித்யாசமான அந்தக்கால விட்டாலச்சார்யா ரேஞ்ச்ல உள்ள படங்களாகத்தான் இருக்கும்.

சித்தர்கள் கூடு விட்டு கூடு பாயும் கலையை மையமாக வைத்து பிரபுவை வைத்து சின்ன வாத்தியார் படத்தை இயக்கினார், அதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதை ஆனால் சரியாக போகவில்லை. ஜோதிகாவை வைத்து இவர் இயக்கிய லிட்டில் ஜான்,ஒரு மாயாஜால படம்தான் இவர் மாயாஜால டைப் படங்கள் அதிகம் இயக்குவார் என்பதற்கு  இது போல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

1991ல் இவர் இயக்கிய ஆதித்யா 369, தமிழிலும் அபூர்வ சக்தி 369 என்ற பெயரில் வெளிவந்தது. இது டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை கிருஷ்ண தேவராயர் காலத்துக்கு சென்று விட்டு 2050க்கு மேல் எதிர்காலத்துக்கு செல்லும் கதையாக இவர் அமைத்திருந்தார். இது மாதிரி மாய மர்ம படங்களே இவர் பெரும்பாலும் இயக்கி இருக்கிறார்.

கமல்ஹாசனை வைத்து இயக்கிய மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் டைட்டிலில் கதை கேளு கதை கேளு என டான்ஸ் ஆடும் முதியவர் இவர்தான்.

கமல்ஹாசன் தான் தமிழில் இவரை முன்னிலைப்படுத்தினார் என்றாலும் சில வருடங்கள் முன் வந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர், இளையராஜா, கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினர், அதில் நிறைய அனுபவமுள்ள மூத்த இயக்குனர் இவரை அதிகம் பேசவிடாமலே கமல்ஹாசனே தடுத்து தடுத்து பேசிக்கொண்டிருந்தார் அதனால் இவரின் பெரும்பாலான அனுபவங்களை கேட்க முடியாமலே போயிற்று.

இவர் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட, கன்னடம், தெலுங்கு படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்துள்ளார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் குடூரில் பிறந்த சிங்கிதம் சீனிவாசராவ்க்கு இப்போ 95 வயதாகிறது இந்த 95 வயதிலும் படம் இயக்கி வரும் சிங்கிதம் சீனிவாசராவை பார்த்து  நான் ஆச்சரியப்படும் விசயம், 70களில் இயக்குனராக இருந்தவர்கள் இன்று பலர் இல்லை, அப்படியே இருந்தாலும் சினிமாவில் இயக்குனராக பரபரப்பாக படம் பண்ணி கொண்டு திரியவில்லை, இவர் 95 வயதிலும் படம் இயக்குகிறார் என்றால் இவர் முதியவர் இல்லை இளைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் போக சினிமா பீல்டில் இன்று வரை சினிமா இயக்கும் ஒரே 70களின் இயக்குனர் என்றும் இவரை சொல்லலாம், வேறு யாரும் என் கண்ணுக்கு தெரியவில்லை.

Abiram Arunachalam

Leave a Reply