சிவாஜி இப்படித்தான்...அவரது மனைவி கமலா சொல்கிறார்
சினிமா
காலையில் எழுந்து ஸ்டுடியோவுக்குக் கிளம்புவதற்குள் குறைந்தபட்சம் நூறு தடவையாவது ‘அம்மா’ என்று அழைத்து விடுவார். ஆமாம், என்னை அவர் அழைப்பது ‘அம்மா’ என்றுதான். இன்னும் பல தடவை அழைக்க மாட்டாரா என்று இருக்கும் எனக்கு.
அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, மஞ்சள் குங்குமம் துலங்கும் முகத்துடன் அவரை நான் எழுப்புவதைத்தான் அவர் பெரிதும் விரும்புகிறார்; அவரை மகிழ்விப்பதுதானே என் கடமை. வேலைக்கு (அவர் படப்பிடிப்புக்குப் போவதை அப்படித்தான் சொல்லுவார்) புறப்படுமுன்னர் என் கையால் ஒரு டம்ளர் மோர் வாங்கி குடித்துவிட்டுத்தான் கிளம்புவார்.
அவருக்கு ஒரு டம்ளர் மோர் என் கையால் கொடுப்பதுடன் திருப்திப்பட வேண்டியிருக்கிறது. அருகிலிருந்து நன்கு உபசரித்து உணவு பரிமாறும் பாக்கியம் எனக்குக் கிட்டுவதே இல்லை. காரணம், பாதி நாள்களுக்குச் சாப்பாடு ஸ்டுடியோவுக்குப் போய்விடும். வீட்டுக்கு வருகிற நாள்களில் கூடவே பத்துப் பேராவது சாப்பாட்டுக்கு வருவார்கள். அவர்களில் பலர் அந்நியர்களாகவே இருப்பார்கள்.
மனைவி இருக்க வேண்டிய இடம் வீடு என்பதே என் அபிப்பிராயம்.
தனது நண்பர்களிடம், ‘அவளுக்கென்ன தெரியும்’ என்று என்னைப் பற்றிச் சொல்லுவாரே தவிர, என் மீது அவருக்கு அபார நம்பிக்கை. அதற்கு அடையாளமாக கொத்துச் சாவியான என் இடுப்பில்.
அவர் நடிக்கும் எந்தப் படத்திற்காக வெளியூர் போனாலும் சரி என்னைக் கூட அழைத்துப் போகத் தவறுவதில்லை. குழந்தைகளுக்கு விடுமுறை காலமானால் குழந்தைகளும் எங்களுடன் வருவார்கள்.
வீடு தேடி வருகிறவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்பது அவர் கட்டளை. சாப்பாட்டு நேரமானால் சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும் மற்ற நேரமானால் காப்பியாவது கொடுத்து அனுப்ப வேண்டும். இதில் தவறிவிட்டால் அவருக்கு வரும் கோபம்... அப்பப்பா...!!
அவருக்கு நான்கு குழந்தைகளில் எல்லார் மேலும் சமமான பிரியம்தான். சாந்தா, ராம்குமார், பிரபுராம், தேன்மொழி இவர்களோடு அவர் உல்லாசமாக வீட்டில் இருப்பதை மிகவும் விரும்புவார். ஆனால் நேரமிருப்பதில்லையே.
Senthilvel Sivaraj






















