TamilsGuide

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றுகின்றனர்..!- எருமசாணி விஜயகுமார் மீது அனுகிரகா குற்றச்சாட்டு... 

அடிபொலி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் அனுகிரகா எஸ்.நம்பியார். தற்போது ரிசார்ட் என்ற வெப் தொடரில் ஸ்ரீநிதி என்ற கதாபாத்திரத்தில் அனுகிரகா நடிக்கிறார்.

இந்த தொடரில் கதாநாயகனாக எருமசாணி யூடியூப் மூலம் பிரபலமான விஜய் குமார் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை அனுகிரகா எஸ்.நம்பியாரை தொடரில் ஓராண்டு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்தாமலும் சம்பளம் தராமலும் ஏமாற்றிவிட்டதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அனுகிரகா வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது நான் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்து உள்ளேன். ஓராண்டாக படம் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பே நடத்தவில்லை. வேறு படங்களில் நடிக்கவும் வேண்டாம் என கூறினார்கள். 4 மாதங்களாக நான் நடிக்கவில்லை. எனக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.

படத்தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டால் விஜய் குமாரை கேளுங்கள் என்கிறார்கள். நான் கேரளாவில் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவள். எனக்கு கனவுகள் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எனது நண்பர் விஜய்குமாரிடம் பேசினார். என்னை நடிக்க வர வேண்டாம் என்று விஜய்குமார் அவரிடம் கூறியுள்ளார்.

விஜய்குமாரின் மனைவி என் நண்பரிடம் நீ வேண்டுமானால் அவளை திருமணம் செய்து உடன் வைத்துக் கொள். கொடுத்த கதாபாத்திரத்தில் வந்து நடிக்க சொல்லுடா’ எனக் கூறினார். தயாரிப்பு நிறுவனமும் சரியில்லை. இளம் கலைஞர்களை மதிப்பதில்லை.

என் மனநலம், உடல் நலம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன். இனி யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுகிரகாவின் குற்றச்சாட்டுகள் சமூக வலை தளங்களில் வைரலானது.

குற்றசாட்டுகளுக்கு விளக்கம் தெரிவித்து எருமைசாணி விஜய்குமார் மனைவி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த வெப் தொடரின் தயாரிப்பாளர்கள் நாங்கள் அல்ல. சம்பளம், வாய்ப்புகள் குறித்து கேள்விகள் இருந்தால் தயாரிப்பு நிறுவனத்திடமோ இயக்குனரிடமோ தான் கேட்க வேண்டும்.

நடிகை அனுகிரகா ஒரு நாள் இரவு 11.30 மணிக்கு போன் பண்ணி என்ன விஷயம் என்று தெரியாமல் கத்திக் கொண்டிருந்தார். என்னுடைய கணவர் எவ்வளவு பேசியும் அவர் கேட்கவில்லை. அதற்கு பிறகுதான் போனை வாங்கி நான் பேசினேன். நான் சொல்வதையும் அவர் புரிஞ்சிக்கவில்லை. அதனால் நானும் அவரிடம் கோபமாக பேசினேன்.

நடிகையின் காதலன் தான் எங்களிடம் அதிகமாக பேசினார். அவர் தவறாக பேசவே நான் போனை வைடா என்று சொன்னேன்.

அதை ரெக்கார்டு பண்ணி வைத்துக்கொண்டு எங்களை மிரட்டுகிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு என்ன நடந்தது என்று தெரியாமல் மக்களும் என்னை திட்டுறீங்க. குறிப்பாக எங்கள் குழந்தைகள் குறித்தும் விமர்சிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்குமார் மனைவி விளக்க வீடியோவை அடுத்து அனுகிரகா மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்காக என் நண்பர் பேசுவது தவறு என்று சொல்லும் நீங்க ஏன் விஜய்குமாருக்கு பதில் பேசினீங்க? வார்த்தைக்கு வார்த்தை எனக்காக பேசியவரை பாய்பிரெண்ட் என்று சொல்றியே. அவர் என் பாய்பிரெண்ட் என உனக்கு தெரியுமா? என் நண்பனாக, அண்ணனாக, அப்பாவாக கூட இருக்கலாம். நீ என்னை மோசடி செய்ற, எத்தனை பேரை ஏமாத்தியிருக்க என என்னிடம் ஆதாரம் உள்ளது.

இவ்வாறு அனுகிரகா மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment