தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு..
சினிமா
"மாட்டுக்கார வேலன் "படத்தில் டைட்டில் சாங். சத்தியம் நீயே.. தர்மத் தாயே.. குழந்தை வடிவே.. தெய்வ மகளே.. பசுவின் சிறப்புகளை கவிஞர் கண்ணதாசன் சொல்லும் பாடல். அதுவும் மக்கள் திலகம் அந்தப் பாடலை பாடி சொல்லும்போது அதன் சிறப்பு அதிகமாகிறது.
கிராமங்களில் சொல்லும் பழமொழியை சொல்லியிருப்பார்.
‘தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு..’
எல்லா மரமும் ஏதாவது ஒன்று அல்லது சில பொருட்கள் பயன் கொடுப்பவையாக இருக்கும். வாழை மட்டும்தான் இலை, பூ, காய், பழம், தண்டு என்று எல்லா பாகங்களையும் நமக்கு பயனாகத் தன்னையே தருகிறது. சம்சாரி என்றால் குடும்பஸ்தர். கிராமங்களில் அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பசுமாடு இருந்தால் போதும். அந்தக் குடும்பம் பிழைத்துக் கொள்ளும். பால் கறந்து விற்கலாம். மாட்டுச் சாணம் எரிவாயுவுக்கு பயன்படும். திருநீறு தயாரிக்க சாணத்தை பயன்படுத்துவார்கள். சாணத்தை விராட்டியாகவும் விற்கலாம்.
அதை அழகாக, மாட்டுக்கார வேலன் பாத்திரத்துக்குப் பொருத்தமாக கண்ணதாசன் பயன்படுத்தியிருப்பார். பசு கொடுப்பது மட்டுமல்ல, அந்தப் பசுவை விவசாயி எப்படி மதித்து பார்த்துக் கொள்வார் என்பதையும் சொல்லியிருப்பார்.
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னை காப்பதென் பாடு..
மாட்டுக்கும் விவசாயிக்கும் உள்ள பந்தம் இருக்கிறதே.. கிராமங்களில் தன் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக் கொள்ளும்போது தான் வளர்க்கும் மாட்டையும் சேர்த்து நிற்கவைத்து படம் எடுத்துக் கொள்பவர்கள் உண்டு. அந்த அளவுக்கு தங்கள் குடும்பத்தில் ஒருவராக மாட்டை கருதுவார்கள்.
இதை விட பசுவை உயர்த்திச் சொல்லும் பாடல் வேறு இருப்பதாகத் தெரியவில்லை.
வாய் மட்டும் இருந்தால் மொழி பேசும் தெய்வம்...
சரி... மாட்டுக்கார வேலன் தமிழகமெங்கும் வெற்றி நடை போடுகிறது. மக்கள் திலகத்தின் எனக்குப் பிடித்த போஸ்களில் இதுவும் ஒன்று. குச்சியையும் புல்லாங்குழலையும் எப்படி அழகாக, ஸ்டைலாக பயன்படுத்தி இருக்கிறார் பாருங்கள்..






















