பல்கேரியா - ரஸ்யாவை நோக்கி?
கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்த அணி வெற்றியைப் பெற்று அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், பல்கேரியாவில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் ஒன்றியத்தின் தூக்கத்தைக் கெடுப்பதாக அமைந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. ஒரு வார இடைவெளியில் நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல்களின் முடிவுகளும் ஒன்றுக்கு ஒன்று நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டதாக அமைந்துள்ளன. ஐரோப்பாக் கண்டத்தின் எதிர்காலம், குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பின்பற்றிவரும் ரஸ்ய எதிர்ப்பு நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்களைத் தடையின்றிச் செயற்படுத்த நினைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம் பொருந்திய நாடுகளுக்கு ஹங்கேரியில் பதவியில் இருந்த விக்ரர் ஓர்பன் அகன்றமை பாரிய நிம்மதியைத் தந்திருந்தது. ரஸ்ய ஆதரவு நிலைப்பாடு, உக்ரைன் நாட்டுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குதல் என்பவற்றுக்கான எதிர்ப்பு போன்ற காரணங்களால் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டாத விருந்தாளியாகக் கருதப்பட்டார். இந்நிலையில் பல்கேரியாவில் நடைபெற்ற தேர்தலில் மேனாள் ஜனாதிபதி ருமென் ராதவ் தலைமையிலான கூட்டணி அ
மோக வெற்றி பெற்றிருப்பதானது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத் திட்டங்களைச் சவாலுக்கு உட்படுத்துவதாக உள்ளது. ஏனெனில், ஓர்பன் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தாரோ அதேபோன்ற கொள்கைகளை உடைய ஒருவராகவே ராதவ் அவர்களும் அறியப்படுகிறார்.
2021ஆம் ஆண்டு முதல் அரசியல் குழப்ப நிலையை தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பல்கேரியாவில் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் ஐந்து வருட இடைவெளியினுள் நடைபெற்ற ஏழாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 2024 அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ரோசன் ஸெல்யாஸ்கொவ் தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கிடையில் கடந்த டிசம்பரில் பதவி துறக்கும் நிலை உருவானது. ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாடாளாவிய ரீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அரசாங்கம் கலைக்கப்பட்டது.
தற்போதைய தேர்தல் முடிவுகள் பல்கேரியாவைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவிய அரசியல் குழப்ப நிலையை தற்காலிகமாகவேனும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது எனலாம். அதேவேளை, ரஸ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர், உக்ரைன் போர் தொடர்பில் மாறுபட்ட கருத்து கொண்டவர் எனக் கருதப்படும் ராதவ் ஆட்சிக் கட்டிலில் அமர இருப்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தலையிடியான விடயமாக அமையும் எனவும் எதிர்பார்க்கலாம்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் 6,641,768 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இம்முறை வாக்களிப்பு வீதம் 50.05 ஆக இருந்தது. அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்கள் காரணமாக விரக்தி அடைந்திருந்த போதிலும், கடந்த முறையை விடவும் 11.24 விழுக்காடு மக்கள் இந்தத் தேர்தலில் அதிகமாக வாக்களித்திருந்தனர். 240 ஆசனங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 24 கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் சார்பில் மொத்தம் 4,786 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். இவர்களுள் 3,347 ஆண்களும் 1,439 பெண்களும் அடங்குவர்.
ராதவ் தலைமையிலான 'முற்போக்கு பல்கேரியா கூட்டணி' இந்தத் தேர்தலில் 43.91 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. 130 ஆசனங்களை வென்ற இந்த அணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை சற்றொப்ப பத்து ஆண்டுகள் பல்கேரிய நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த ராதவ் முன்னர் பல்கேரிய விமானப் படையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஜனாதிபதிப் பதவியைத் துறந்த இவர், புதிய கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார்.
2009 முதல் 2021 வரையான காலப்பகுதியினுள் மூன்று முறை மொத்தமாக ஒன்பது வருடங்கள் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த பொய்க்கோ பொரிசொ தலைமையிலான 'ஐரோப்பிய அபிவிருத்திக்கான பல்கேரியக் குடிமக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒன்றியம்' ஆகிய கட்சிகளின் கூட்டணி இந்தத் தேர்தலில் 39 ஆசனங்களை வென்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. 23.18 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள இந்தக் கூட்டணி முன்னைய தேர்தலோடு ஒப்பிடுகையில் 27 ஆசனங்களை இழந்துள்ளது.
அசன் வசிலேவ் தலைமையிலான 'ஜனநாயக பல்கேரியாவின் மாற்றத்தைத் தொடர்வதற்கான நாங்கள்' என்ற கட்சிக் கூட்டணி 37 ஆசனங்களை வென்றுள்ளது. முன்னைய தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்தக் கூட்டணி ஒரு ஆசனத்தை மேலதிகமாகப் பெற்றுள்ளது. மொத்தமாக 12.42 விழுக்காடு வாக்குகளை இந்தக் கூட்டணி தனதாக்கிக் கொண்டுள்ளது.
டெல்யான் பீவ்ஸ்கி தலைமையிலான 'உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கான இயக்கம்' 7.01 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 21 ஆசனங்களை வென்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தக் கட்சி 8 ஆசனங்களை இழந்துள்ளது.
4.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள கொஸ்ராடியன் கொஸ்ராடினோவ் தலைமையிலான 'மறுமலர்ச்சிக் கட்சி' 12 ஆசனங்களை வென்றுள்ளது. இம்முறை தேர்தலில் இந்தக் கட்சி 21 ஆசனங்களை இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
'ஊழல், வாழ்க்கைச் செலவு உயர்வு, தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குதல்' உள்ளிட்ட விடயங்களே இம்முறை தேர்தலில் பிரதான பரப்புரை அம்சங்களாக விளங்கின. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையின் கீழ் ஆகக் குறைந்தது ஐந்து வீத வாக்குகளைப் பெறும் கட்சிகளே ஆசனங்களைப் பெற முடியும் என்ற விதிமுறைக்கு ஏற்ப இம்முறை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 விழுக்காடு வரை பயனற்றுப் போனதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதேவேளை, 1991ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பல்கேரியன் சோசலிசக் கட்சி முதல் தடவையாக எந்தவொரு ஆசனத்தையும் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. மேலும், தீவிர வலதுசாரிக் கட்சிகள் மொத்தமாக அறுபது ஆசனங்களைப் பறிகொடுத்து உள்ளன. அந்த வரையறைக்குள் அடங்கும் ஒரேயொரு கட்சியான மறுமலர்ச்சிக் கட்சி மாத்திரமே 12 ஆசனங்களை வென்று நாடாளுமன்றம் செல்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
பல்கேரியாவில் ராதவ் பெற்றுள்ள வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் தற்போது எழத் தொடங்கியுள்ளன. கடந்த காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவராகவும், ரஸ்யா சார்பானவராகவும் தன்னைக் காட்டிக் கொண்ட ராதவ் ஹங்கேரியின் மேனாள் ஜனாதிபதி விக்ரர் ஓர்பனைப் போலவும், ஸ்லோவக்கிய பிரதம மந்திரி ரொபர்ட் பிக்கோ அவர்களைப் போலவும் செயற்படக் கூடும் என ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
ராதவின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ரஸ்யாவில் இருந்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்தும் ஏககாலத்தில் வாழ்த்துச் செய்திகள் கிடைத்துள்ள நிலையில், எந்தப் பக்கமும் சாராமல் யதார்த்தமான அணுகுமுறையை ராதவ் பின்பற்றக் கூடும் என மற்றொரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பல்கேரியா நாட்டு மக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தும் நோக்குடனேயே தேர்தலில் போட்டியிட்டு ராதவ் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது முக்கிய இலக்கு பல்கேரிய மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க முடியும், இருக்கவும் வேண்டும். ஊழலில் சிக்கியுள்ள அரச இயந்திரத்தை மீட்டெடுப்பது மாத்திரமன்றி உள்நாட்டு விவகாரங்களில் அளவுக்கு அதிகமாகத் தலையீடு செய்யும் அந்நிய நாடுகளின் செயற்பாடுகளையும் அவர் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
சொந்த நாட்டை சுபீட்சமான பாதையில் நடைபோடச் செய்த பின்னரே அயல் விவகாரங்களில் அவரால் கவனம் செலுத்த முடியும். எனினும், ஒருசில விமர்சகர்கள் சொல்வது போன்று ரஸ்ய சார்பு நிலைப்பாட்டை அவர் எடுப்பதன் மூலம் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருமானால் முழு உலகுமே மகிழ்ச்சி கொள்ளும் என்பது நிச்சயம்.
சுவிசிலிருந்து சண் தவராஜா























