அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரை உடனடியாக நிறுத்தக் கோரி, சோசலிச சமத்துவக் கட்சியினரால் ஹட்டன் நகரில் இன்று (26) கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நகரில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள நடைபாதையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிரிவர்தன உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
போரை நிறுத்தக் கோரும் பிரதான கோரிக்கையுடன், பின்வரும் முக்கிய விடயங்களையும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சர்வதேச ரீதியில் ஒரு சோசலிச சர்வதேசவாத போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்,
பல்கலைக்கழகங்களில் நிலவும் அடக்குமுறைகளை நிறுத்தி, ஒன்றுகூடும் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின் கீழான நிதி வெட்டுக்களை உடனடியாக நிறுத்த வேண்டும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏகாதிபத்தியப் போர்க்கொள்கைகளுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த விழிப்புணர்வுப் போராட்டம் அமைந்திருந்ததாகக் கட்சியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.


