TamilsGuide

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (25) யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில் அந்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கூறி வருகின்ற நிலையில், வேறொரு தரப்பினரும் அதில் தங்களது காணி இருப்பதாக உரிமை கோரி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றையதினம் குறித்த காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா ஈடுபடும்போது, அங்கு வந்த பெண்கள் இருவர் அதில் ஒருபகுதி தமது காணி என்று கூறி முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

எதிரே நின்ற பெண்கள் கையில் எந்தவிதமான ஆயுதங்களோ, பொருட்களோ இல்லாமல் நின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா திடீரென தனது கை துப்பாக்கியை எடுத்து அந்த பெண்களை மிரட்டியுள்ளார்.

பெண்கள் மீதான இந்த சம்பவமானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அநுர அரசானது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு துப்பாக்கி கொடுத்துள்ளமை மக்களுக்கு ஆபத்து என ஏற்கனவே பலதடவைகள் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டிய நிலையில் இதுவரை அந்த துப்பாக்கியானது மீளப் பெறப்படவில்லை.

இது இவ்வாறு தொடருமானால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment