TamilsGuide

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு - வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின் அடிப்படையில், நாட்டின் வாகன இறக்குமதி உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான செலவு வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்டகாலமாக அமுலில் இருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி மாதம் முதல் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

நீண்டகாலமாகத் தேங்கியிருந்த வாகனங்களுக்கான கேள்வி (Demand) மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவையே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின்படி: 2025ஆம் ஆண்டில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகன இறக்குமதிக்காக 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் வரலாற்றில் பதிவான மூன்றாவது அதிகபட்ச வருடாந்த செலவாகும். இதற்கு முன்னர் 2015-இல் 2.12 பில்லியன் டொலர்களும், 2018-இல் 2.09 பில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டிருந்தன.

குறிப்பாக 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வாகன இறக்குமதியில் பாரிய வளர்ச்சி காணப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்நிலையில் வாகனங்களுக்கான கேள்வி திடீரென அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வரி மற்றும் வரி அல்லாத பல்வேறு கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இருப்பினும், அத்தகைய தடைகளையும் மீறி வாகன இறக்குமதி செலவு கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்குப் பிறகு வாகனச் சந்தை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
 

Leave a comment

Comment