TamilsGuide

மெக்ஸிக்கோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கனடியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மெக்ஸிகோவிலுள்ள புகழ்பெற்ற தியோதிஹுவாகன் (Teotihuacan) பிரமிடுகளில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கனடிய சுற்றுலாப் பயணியின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், டெக்ஸ்கோகோ (Texcoco) நகராட்சியில் உள்ள அலுவலகத்தில் அடையாளங்காணும் நடைமுறைகள் முடிந்த பின்னர் உடல் கையளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்ட ஒன்றாக இருக்கலாம் என மெக்ஸிகோ அதிகாரிகள் கருதுகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட ஜூலியோ சீசர் ஜாசோ ராமிரெஸ் (Julio Cesar Jasso Ramirez) என்ற 27 வயதுடைய மெக்ஸிகோ பிரஜை, பிரமிட்டின் மீது நின்றுகொண்டு சுற்றுலாப் பயணிகளை வெறுப்பதாகக் கத்தியபடியும், விசித்திரமான இசையை ஒலிக்கவிட்டபடியும் கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளார்.

இதில் கனடியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டெலிசியா லி டி யோங் (Delicia Li de Yong) என்ற 29 வயது கனடியப் பெண் உட்பட அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 13 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாக்குதலில் ஈடுபட்டவரிடமிருந்து 1999-ல் அமெரிக்காவின் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மெக்ஸிகோ அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், இது ஒரு பயங்கரமான சூழ்நிலை எனவும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.  
 

Leave a comment

Comment