நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (24) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இப்போராட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.
அடிப்படை தேவைகள் அடங்கிய மகஸர் ஒன்று நெடுந்தீவு பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நெடுந்தீவில் 1418 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 688 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 730 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சாராப்பிட்டி கிணற்று நீரையே குடிநீருக்காக நம்பி இருக்கின்றார்கள்.
ஆனால் அதிகளவான நீரை கடற்படையினரும் பயன்படுத்துவதால், தற்போது கிணற்று நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது. ஆகையால், இயற்கை நன்னீர் ஊற்றுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து பிரச்சினை காணப்படுகின்றன. கடல் வழி பயணத்திற்காக 3 கடற்கலன்கள் அதாவது படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு போதியளவு தனியார் படகுகளும் இல்லை. நாளாந்தம் பயணங்களை மேற்கொள்ளும் பொது மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டும், அத்தியாவசிய சுகாதார தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென்று பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஜனாதிபதி மற்றும் 5 அமைச்சுக்கள், வடமாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களுக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.


