கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும். 'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.
அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.
எல்லாவற்றிக்கும் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.
தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும்.
Natesan Natesan


