இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டைத் தடை செய்யும் நடைமுறையைச் சட்டபூர்வமாக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் அழுத்தங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், இதனை ஒரு சட்டரீதியான தேவையாக மாற்ற அரசாங்கம் இணங்கியுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தமானது பாடசாலை வகுப்பறைகளில் தேவையற்ற இடையூறுகளைக் குறைப்பதற்கும், மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித் (Jacqui Smith) பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில்,
இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் நிலவும் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். பாடசாலை அதிபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தெளிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் ஏற்கனவே உள்ள வழிகாட்டல்களைச் சட்டபூர்வமானதாக மாற்றுகிறோம்," எனத் தெரிவித்தார்.
பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களைக் கண்காணிப்பதற்கான கட்டாயப் பதிவேடு மற்றும் அவர்களின் நலனைத் தொடர்ந்து கண்காணிக்க 'தனித்துவமான அடையாளங்காட்டி'முறை அறிமுகப்படுத்தப்படும்.
இங்கிலாந்தின் 99.8% ஆரம்பப் பாடசாலைகளும், 90% இடைநிலைப் பாடசாலைகளும் ஏற்கனவே கையடக்கத் தொலைபேசிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. இந்த முடிவைச் சில அதிபர்கள் வரவேற்றுள்ள போதிலும், 'பாடசாலை மற்றும் கல்லூரித் தலைவர்கள் சங்கத்தின்' (ASCL) பொதுச் செயலாளர் பெப்பே டி'இயாசியோ (Pepe Di’Iasio) ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி தடையைச் சட்டமாக்குவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. மாறாக, மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் அல்லது பாதுகாப்பான பைகளை (Locked pouches) வழங்குவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என அவர் குறிப்பிட்டார்.


