TamilsGuide

எம்.எஸ்.வி பாடலை திருத்திய கண்ணதாசன் - பாட்டு எவர்கிரீன் ஹிட்டு

குடிகாரன் இப்படி சொல்லவே மாட்டான், நீ வரியை மாற்று; எம்.எஸ்.வி பாடலை திருத்திய கண்ணதாசன்: பாட்டு எவர்கிரீன் ஹிட்டு

மனிதனின் உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்த ஒரே கவிஞர் என்றால் அது கண்ணதாசன் தான்.

தமிழ் திரை இசை உலகில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி ஒரு பொற்காலம். இவர்களுக்கு இடையேயான பிணைப்பையும், கண்ணதாசனின் கவித்துவ மேதமையையும் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும். இவர்கள் பாடல் எழுதும் போது நடந்த உரையாடல்கள், செல்ல சண்டைகள் குறித்து அவ்வப்போது பழைய வீடியோக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

அந்த வகையில் சிவாஜி படத்தில் ஒரு பாடல் எழுதும்போது நடந்த சுவாரஸ்யமாக அனுபவம் குறித்து பார்ப்போம். கவிஞர் கண்ணதாசன், தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியராக பல திரைப்பாடல்களை எழுதியவர். அவரது கவிதைகள் வெறும் வரிகளாக இல்லாமல், அவை மக்களின் இதயங்களில் நேரடியாக பேசும் மொழியாக அமைந்தன. மனிதனின் உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்த ஒரே கவிஞர் என்றால் அது கண்ணதாசன் தான்.

மனதை உலுக்கும் வரிகளும், வாழ்வை வழிநடத்தும் வார்த்தைகளும் கொண்ட கண்ணதாசன் பாடல்கள், தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் நினைவாக உள்ளன. அதனால்தான் இப்போது கூட கண்ணதாசனின் பாடல் காற்றில் ஒலித்துகொண்டிருக்கிறது. எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட ‘வீடு வரை உறவு… வீதி வரை மனைவி’ பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கண்ணதாசனின் பாடல்கள் உருவான கதைகளில் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது. பல கதைகள் இருக்கிறது.

சிவாஜி, சவுகார் ஜானகி, மனோரமா, சந்திரபாபு, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் நடித்து 1972-ம் வருடம் வெளியான திரைப்படம் நீதி. இப்படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கான ஒரு பாடலை எம்.எஸ்.வி உருவாக்கி கொண்டிருந்தார். குடித்துவிட்டு போதையில் இருக்கும் கதாநாயகன் தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் இந்த உலகத்தை பற்றியும் பாட வேண்டும். அதேபோல், கடவுளையும் விமர்சிக்க வேண்டும். இதுதான் சூழ்நிலை.

இதற்கு கண்ணதாசனை தவிர வேறு யார் சிறப்பாக பாடல் எழுதமுடியும் என்பதால் அவரை அழைத்திருந்தனர். ஆனால், அவர் வர நேரமானதால் சில டம்மி வார்த்தைகளை போட்டு எம்.எஸ்.வியே அந்த பாடலை உருவாகியுள்ளார். இன்று முதல் குடிக்கமாட்டேன். சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் குடிச்சிக்கிறேன் கொஞ்சம்’ என வரிகள் அமைத்துள்ளார்.

எம்.எஸ்.வி இதை பாடிக்கொண்டு இருக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த கண்ணதாசன் ‘இதில் கொஞ்சம் மாற்ற வேண்டும். இன்று முதல் என்பதை நாளை முதல் என்று மாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். மேலும், எந்த குடிகாரனும் இன்றுமுதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லவே மாட்டான். அதனால் அதை நாளை முதல் என்று மாற்றிக்கொள் என கூறியுள்ளார்.  அப்போது உருவான பாடல் தான் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்.. சத்தியமடி தங்கம்.. ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ இதுதான் பல்லவி என்றார். 

அதேபோல் அந்த பாடலில் இயக்குனர் கேட்டு கொண்டபடி குடிகாரன் கடவுளை விமரிசிப்பது போலவும் வரிகளை எழுதி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை எம்.எஸ்.வி ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார்.

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment