மெட்டும், பாட்டும் சூப்பர், ஆனா இந்த பாட்டு படத்தில் வேணாம்; பாட்ஷா பட சூப்பர் ஹிட் பாடலை மறுத்த ரஜினி நானும் ரஜினி சாரும் தேவா சாரின் ஸ்டுடியோவுக்குச் சென்று பாடலைக் கேட்டோம். அந்தப் பாட்டின் மெட்டும், பீட்டும் மிகச் சிறப்பாக இருந்தது.
1995-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நக்மா, விஜயகுமார், ஜனகராஜ், சரண்ராஜ், தேவன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தின் முதல் பாதியில் ரஜினிகாந்த் ஆட்டோ டிரைவராகவும் 2-வது பாதியில் கேங்ஸ்டராகவும் இருப்பார். தமிழ் சினிமாவின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதே சமயம் இந்த படத்தின் ஹிட் பாடல் ஒன்றை படத்தில் வைக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் தேவாவிடம் சொன்னதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "நீ நடந்தா நடை அழகு" என்ற பாடல் உருவான போது ஒரு சின்ன சம்பவம் நடந்தது. அந்தப் பாடலை கம்போஸ் செய்து, ரெக்கார்டிங்கும் முடிந்துவிட்டது. அன்று 'பாட்ஷா' படத்தின் சண்டைக்காட்சி (Fight scene) ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது தேவா சாரிடம் சென்று பாடலைக் கேட்கலாம் என்று நான் சொன்னேன்.
நானும் ரஜினி சாரும் தேவா சாரின் ஸ்டுடியோவுக்குச் சென்று பாடலைக் கேட்டோம். அந்தப் பாட்டின் மெட்டும், பீட்டும் மிகச் சிறப்பாக இருந்தது. பாடலைக் கேட்டுவிட்டு எல்லோரும் "பெண்டாஸ்டிக்" என்று சொன்னோம். ரஜினி சார் தேவா சாருக்குக் கைகொடுத்து விட்டு, "தேவா சார், பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இதை கேசட்டில் (Audio Tape) மட்டும் வைத்துக் கொள்ளலாம், படத்தில் வேண்டாம்" என்று கூறிவிட்டார்.
தேவா சாருக்குப் பெரிய அதிர்ச்சி. "ஏன் சார்? நல்ல பாடல்தானே, ஏன் படத்தில் வைக்க முடியாது?" என்று கேட்டார். அதற்கு ரஜினி சார், "ஏற்கனவே 'ஸ்டைலு ஸ்டைலு தான்', 'தங்கமகன்' என இரண்டு டூயட் பாடல்கள் படத்தில் இருக்கிறது. மூன்றாவது டூயட் எதற்கு? இது வேண்டாம், விட்டுவிடலாம். பாடலை மட்டும் கேசட்டில் சேர்த்துக் கொள்வோம்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
இதை கேட்டு தேவா சார் மிகவும் வருத்தப்பட்டார். "என்ன சார் இப்படிச் சொல்லிட்டார்?" என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம், "கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்குத் திரும்பினேன். அன்று இரவு இன்ட்ரவல் ஃபைட் சீன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஆனால் என் மனதில் எல்லாம் இந்தப் பாடலைக் எப்படியாவது படத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் யோசனையுடன் தள்ளி நின்று தனியாக நடந்து கொண்டிருந்தேன். இதைக் கவனித்த ரஜினி சார், உதவி இயக்குனராக இருந்த என் மனைவியை அழைத்து "இவன் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறான், இங்கே வரமாட்டேன் என்கிறான். ஏதாவது பிளான் பண்ணுவான் பார்" என்று சொன்னார். அதன் பிறகு, நான் அவரிடம் பேசிச் சம்மதிக்க வைத்து, அந்தப் பாடலைப் படத்தில் சேர்த்தோம் என்று கூறியுள்ளார்.
தேன்மொழி


