அமெரிக்காவில் கடந்த ஆண்டு காணாமல் போய் பின்னர் மரணமான 14 வயது சிறுமி செலஸ்டி ரிவாஸ் ஹெர்னாண்டஸின் தொடர்பாக, பிரபல இண்டீ-பொப் (indie-pop) பாடகர் D4vd மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025 செப்டம்பரில், பாடகரின் டெக்சாஸ் முகவரியில் பதிவு செய்யப்பட்ட டெஸ்லா கார் ஒன்றிலிருந்து சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
காரின் முன் பகுதியில் ஒரு பையில் தலையும் உடற்பகுதியும், மற்றொரு கறுப்பு பையில் துண்டிக்கப்பட்ட கை, கால்களும் கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணங்களையும் மூன்று குற்றச்சாட்டுகளையும் லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட சட்டத்தரணி நாதன் யோக்மேன் முன்வைத்துள்ளார்.
பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி கொலை செய்தமை. தனது இசை வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த சிறுமியை, வருமானத்தைப் பாதுகாத்துக் கொள்ளக் கொலை செய்தமை. பாடகர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் அந்தச் சிறுமி சாட்சியாக இருந்தமை என்பதற்காகவே அவர் பாடகரால் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பாடகர் சிறுமியுடன் பலமுறை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது மற்றும் உடலத்தைச் சிதைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். இதற்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களாக இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டதற்குக் காரணமான விமர்சனங்களுக்குப் பதிலளித்த லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தலைமை அதிகாரி ஜிம் மெக்டோனல், உடலம் சிதைவடைந்திருந்ததால், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பாடகர் D4vd, தற்போது பிணையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.


