TamilsGuide

டொராண்டோவில் பதிவான சோகம் - பரிதாபகமாக குழந்தை மரணம்

டொராண்டோ நகரில் திங்கட்கிழமை வாகனமொன்றின் பின்புறத்தில் இருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொராண்டோவின் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் பேப் அவென்யூ சந்திப்பிற்கு அருகிலுள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் பின்புறத்தில் குழந்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாக அவசர அழைப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்புப் படை, அவசர மருத்துவ உதவிப் பிரிவு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பிராட்பரி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மிகுந்த மனவருத்தத்துடன் இந்த தகவலைத் தெரிவிக்கிறேன்; அந்த குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டது.

தற்போது விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை எவ்வளவு நேரம் வாகனத்திற்குள் இருந்தது அல்லது உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்த மேலதிக விவரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து டொராண்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  
 

Leave a comment

Comment