இன்று (21) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அமைதிக்கான நடைப்பயணம் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் பதிவில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது,
அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு, அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இன்று தொடங்கும் இலங்கை முழுவதுமான ‘அமைதிக்கான நடைப்பயணம்’ பயணத்தை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
புத்தரின் புனிதப் பொருட்களையும் ஒரு போதி மரக்கன்றையும் சுமந்துகொண்டு, தம்புள்ளையிலிருந்து புறப்பட்டு நமது நாடு முழுவதும் பயணிக்கும் இந்தப் புனிதப் பயணத்தின்போது, நமது பாரம்பரியத்தை வரையறுக்கும் அமைதி மற்றும் கருணையின் நீடித்த விழுமியங்களைப் பற்றி சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் அழைக்கிறேன்.
இந்தப் பயணம் நமது தேசத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தி, உலகிற்கு அமைதியின் செய்தியைப் பகிரட்டும் – எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் இந்த நடைப்பயணம் அமெரிக்க அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறுவனர் வண. பஞ்ஞாகர தேரர் தலைமையில் இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெறுகிறது.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் இந்த அமைதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று காலை மீண்டும் தம்புள்ளை புனிதத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைப்பயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கலை, மகர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.
அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், கொண்டவரப்பட்ட ஸ்ரீ மகா போதியின் கன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.


