TamilsGuide

தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் வெற்றிக்கு இவர்களின் கதைக்கு முக்கிய பங்குண்டு.

பல தெலுங்கு படங்களை பார்க்கையில் கதை பருச்சூரி ப்ரதர்ஸ் என இருக்கும்.  யார் இவர்கள் எந்த தெலுங்கு படத்தை தொட்டாலும் வருகிறார்களே என வியந்திருக்கிறேன் அப்புறம்தான் தெரியுது ஆந்திர மசலா படங்கள் பலவற்றின் கதை எழுதிய நாயகர்கள் இவர்கள்தான் என்று. அதிலும் தெலுங்கில் முக்கிய ஹீரோக்களான அக்கட தேச ஆந்திர வாலாக்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என 80 90களின் ஹீரோக்களின் வெற்றியில் இவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஏனென்றால் பல ஆந்திரா கோங்குரா மசாலா கதைகளையும் சிற்சில வித்யாசமான கதைகளையும் எழுதி அந்த படங்களை வெற்றியடைய செய்த பெருமை பருச்சூரி ப்ரதர்ஸ்க்கு உண்டு. 1978ல் தெலுங்கு சினிமா உலகில் இவர்கள் நுழைந்தனர்.

பருச்சூரி வெங்கடேஸ்வர்ராவ், பருச்சூரி கோபாலகிருஷ்ணன் என்பதே சகோதரர்களான இவர்களின் பெயர்களாகும். இவர்கள் கதை எழுத்தாளர்கள் மட்டும் இல்லை. தெலுங்கில் 9 படங்களை அண்ணன் தம்பிகளாய் சேர்ந்து இயக்கிய இயக்குனர்களும் ஆவார்கள். அத்தோடு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் இவர்கள் கதையில் கார்த்தவ்யம் என்று வெளியாகி வெற்றி பெற்ற படம் டப் செய்யப்பட்டு வைஜெயந்தி ஐபிஎஸ் ஆக தமிழில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஒரு பிரியாணிக்கு சரியான மசாலாக்களை சரிவிகிதத்தில் கலந்து செய்வது போல இவர்களும் பல தெலுங்கு படங்களுக்கு மசாலாவை சரிவிகிதத்தில் கலந்து கதை எழுதியுள்ளனர்.

மசாலா படங்கள் மட்டுமல்லாது வித்யாசமான கதைகள் கொண்ட பல படங்களின் கதைகளையும் இயக்கியுள்ளார்கள். ஆந்திராவிலும் இந்த்ருடு சந்த்ருடு என்று வெளியாகி தமிழில் இந்திரன் சந்திரன் என்று வந்த கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வந்த படம் எல்லாம் இவர்கள்தான் கதை.

தெலுங்கில் வந்த பொப்பிலி ராஜா, தமிழில் வாலிபனாக வந்துள்ளது, சூர்யா ஐபிஎஸ் தமிழில் முதலமைச்சர் ஜெயந்தியாக வந்துள்ளது. முட்டா மேஸ்த்ரி மாண்புமிகு மேஸ்த்ரியாக வந்துள்ளது. தெலுங்கில் வந்த வர்ஷம் டப் செய்யப்படாமலே மழை என்று நேரடி தமிழ் படமாகவே வந்தது இப்படி தெலுங்கில் வெற்றி பெற்று அந்த வெற்றியால் டப் செய்யப்பட்டு தமிழிலும் இவர்களின் கதையில் உருவான பல படங்கள் தமிழில் வந்திருக்கிறது.

இவர்கள் மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் தெலுங்குக்கு ரீமேக்கிற்காக செல்லும்போது அதிலும் இவர்களின் கதை திறமையை காண்பித்து ஆந்திரா ஸ்டைலுக்கேற்றபடி கதை திரைக்கதையில் மாற்றம் செய்தவர்கள். தமிழில் வந்த ரமணா, ஹிந்தியில் முன்னா பாய் எம்.பி.பிஏஸ் என்று  வந்து தமிழிலும் வந்த வசூல் ராஜா எம்.பி.பி எஸ் போன்ற படங்கள் தெலுங்கில் வரும்போது அந்த படங்களுக்கும் எழுதியவர்கள். இப்படி மொழி மாற்று படங்களுக்கும், தெலுங்கில் நேரடியாக வெளியான பல மசாலா கமர்சியல் படங்களுக்கும் கதை எழுதியும் இயக்கியும் வெற்றிக்கு துணை நின்ற அண்ணன் தம்பிகள் தான் இந்த பரூச்சூரி ப்ரதர்ஸ்.

தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் வெற்றிக்கு இவர்களின் கதைக்கு முக்கிய பங்குண்டு.

Abiram Arunachalam

Leave a comment

Comment