திரு.குமரிமுத்து அவர்கள் சிறிய துணைப் பாத்திரங்களில் வரும் நகைச்சுவை நடிகர். குமரிமுத்து என்றதும் நினைவுக்கு வருவது அவரது ஒன்றரைக் கண்ணும், இடிச்சிரிப்பும்தான்.
ஆனால், நடப்பு வாழ்வோ, அவருக்கு வறுமையையும், சோகத்தையுமே வாழ்வாக வழங்கியிருந்தது.
மகளின் நிச்சயித்த திருமணத்துக்குப் பணமில்லாமல் ஏழ்மையில் தவித்த நடிகர் குமரிமுத்து!
குமரிமுத்து அவர்களின் கடைசி மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது; ஐம்பதினாயிரம் பணம் இருந்தால் ஓரளவு திருமணச் செலவைச் சமாளிக்கலாம் என்ற நிலை! ஆனால், அவர் கையிலோ பணமில்லை.
இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்றுவந்த பழக்கத்தில் உருவான நண்பரிடம் தயங்கித் தயங்கி, பண உதவி கேட்க, நண்பரோ, அப்போது கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றை இலங்கையில் அரங்கேற்றுவதன் மூலம் கிடைக்கும் இலாபப் பணத்தில், குமரிமுத்து அவர்களுக்கு, ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கொடுக்க இயலும் என்று தெரிவித்தார்; விவேக் அவர்களுக்குச் சம்பளமாக ரூபாய் இரண்டு இலட்சம் கொடுக்கலாம் என்றும் கூறினார்.
விவேக் அவர்கள் படு-பிசியாக இருந்த நேரம். விவேக்கின் சினிமா கால்ஷீட் கிடைக்காமல், பல திரைப்படங்கள் காத்திருப்பில் இருந்த நேரத்தில், நாடகம் ஒன்றிற்காக விவேக்கின் கால்ஷீட் எப்படிக் கேட்பது என்று தயங்கியபடியே,
"தம்பி விவேக், எனது மகள் திருமணத்துக்கு ஐம்பதினாயிரம் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் இந்த நாடகம் இலங்கையில் நடித்துக் கொடுத்தால், எனக்கு ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கிடைக்கும்! . . ."
என்று குமரிமுத்து அவர்கள் கேட்க,
"அதனால என்னண்ணே? அதைவிட வேறுவேலை?"
என்று உடனேயே ஒப்புக் கொண்டார் விவேக் அவர்கள்.
நாடகமும் முடிந்தது; குமரிமுத்து அவர்களும், விவேக் அவர்களும் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வந்த விழாக் குழுவினர், குமரிமுத்துவிடம் ஐம்பதினாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, விவேக் அவர்களிடம் ரூபாய் இரண்டு இலட்சம் பணத்தைப் பேசியபடி கொடுத்தார்கள்.
விழாக் குழுவினர் போனதும், குமரிமுத்துவிடம் வந்த விவேக் அவர்கள், "அண்ணே! பிடிங்க இந்த இரண்டு இலட்ச ரூபாயை! மகளோட கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்துங்கள்!" என்று தமக்குக் கிடைத்த இரண்டு இலட்சம் பணத்தை முனை முறியாமல் அப்படியே குமரிமுத்து அவர்களின் மகள் திருமணத்துக்குக் கொடையளித்தார் நமது கலியுகக் கர்ணன் விவேக் அவர்கள்!
"கலைவாணருக்குப் பிறகு, சிறந்த மனிதரும், நடிகரும் என் நல்ல நண்பரும் விவேக் அவர்கள் மட்டும்தான்"
- குமரி முத்து!
- பிரசாந்த்!


