ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகம பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 27 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இராஜாங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20, 21, 22 , 23 வயதுகளையுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (18) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ராகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


