TamilsGuide

மறக்க முடியுமா?.. எம்.ஜி.ஆர் சம்பளமே வாங்காமல் நடித்த நேற்று இன்று நாளை..!

திரையில் ஜொலித்த 'நேற்று இன்று நாளை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல சிக்கல்களுக்கு பிறகு படம் ரிலீஸானாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படமும் நீங்கா இடம்பிடித்துள்ளது என்பதே உண்மை..!

தமிழ் சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு.

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி மரியாதை உண்டு.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு இருந்த மார்க்கெட்டுக்கு அவர் நினைத்திருந்தால் இன்னும் ஏராளமான படங்களில் நடித்து அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், படத்தின் எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தியதோடு, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டதால்தான் 136 படங்களுக்கு மேல் அவரால் நடிக்க முடியவில்லை.

நடிகராக பல பரிமாணங்களில் பெரும் வெற்றிகளை தமிழ் சினிமா வரலாற்றில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரது நடிப்பில் வெளியான 'நேற்று இன்று நாளை' பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தை அமல்ராஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஏ.அசோகன் தயாரித்திருந்தார். மஞ்சுளா, லதா, நம்பியார், அசோகன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சில சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. 1972-ம் ஆண்டு 'இதயவீணை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், ஒப்புக்கொண்ட படங்களையும் முடிக்க வேண்டும், அரசியலிலும் தனிகட்சி தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரு வேலைகளிலும் தீவிரம் காட்டத்தொடங்கினார். இதற்கிடையில் நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படமும் தாமதமானது.

படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அசோகனின் நிலைமையை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் எனக் கேட்க, அசோகன் சொன்ன தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு எம்.ஜி.ஆர் 'நேற்று இன்று நாளை' படத்தில் நடித்து முடித்த நிலையில், தனக்கு வர வேண்டிய சம்பளத்தையும் வாங்கிக்கொள்ளாமல் விட்டுக்கொடுத்துள்ளார். 2 வருடங்கள் தயாரிப்பில் இருந்த படம், 1974 ஆம் ஆண்டு ரிலீஸானது. திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது.

திரையில் ஜொலித்த 'நேற்று இன்று நாளை' திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல சிக்கல்களுக்கு பிறகு படம் ரிலீஸானாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படமும் நீங்கா இடம்பிடித்துள்ளது என்பதே உண்மை..!

கயல்விழி

Leave a comment

Comment