TamilsGuide

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் இந்தப் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர்.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நெடுந்தீவு மக்கள், நீண்டகாலமாகப் பல துறைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர்.

நெடுந்தீவில் உள்ள 1418 குடும்பங்களில் 688 குடும்பங்களுக்கே சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படுகிறது.

எஞ்சிய குடும்பங்கள் உவர்த்தன்மை கொண்ட நீரையே பயன்படுத்துகின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடல் நீர் உட்புகும் அபாயம் நிலவுவதால், நிரந்தர குடிநீர் திட்டத்தை மக்கள் கோருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் 50 ஆண்டுகள் பழமையான குமுதினி படகுகள் அடிக்கடி பழுதடைவதால் மக்களின் நாளாந்த பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்தும் உரிய திருத்த வேலைகள் நடைபெறவில்லை என மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

உயர்தர வகுப்புகளில் வரலாறு, புவியியல், இந்து நாகரிகம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

தகவல் தொழில்நுட்பம் (ICT) மற்றும் கலைத்துறைப் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய வைத்தியசாலையில் மருந்துக் கலவையாளர், மருத்துவ மாதுக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் விடுமுறை நாட்களில் வைத்தியசாலை இயங்குவதில்லை.

பற்சிகிச்சையும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியில் 2 கிலோமீற்றர் தூரம் பாரிய குழிகளுடன் காணப்படுவதால், அவசரத் தேவைகளுக்காக வைத்தியசாலைக்குச் செல்லும் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வரும் அரசாங்கத்தையும், பொறுப்புக் கூற வேண்டிய திணைக்களத் தலைவர்களையும் கண்டித்து, எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த ஜனநாயக ரீதியிலான போராட்டம் நடைபெறவுள்ளது.

நெடுந்தீவிலும் அதற்கு வெளியிலும் வாழும் மக்கள் மற்றும் அனைத்து பொது அமைப்புகளும் கட்சி பேதமின்றி இந்த வரலாற்றுத் தேவைக்காக ஒன்றிணைய வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

Leave a comment

Comment