லண்டனில் கர்ப்பிணிப் பெண் உயிரிழக்கக் காரணமான விபத்து தொடர்பாக, மெட்ரோபாலிட்டன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி, தென்கிழக்கு லண்டனின் கிட்புரூக் (Kidbrooke) பகுதியில் உள்ள A20 வீதியில் அடையாளம் இடப்படாத பொலிஸ் வாகனம் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் 38 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த அந்தப் பெண்ணும் பின்னர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து ‘பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம்’ (IOPC) நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் மீது தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாக இரண்டு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விருவரும் எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த விசாரணை நிறைவடைந்ததாக பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்து லண்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது


