மிசிசாகாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் போலி கேஸ் கார்டுகளைப் பயன்படுத்தி, லாரி நிறுவனங்களின் கணக்கில் நூற்றுக்கணக்கான டொலர் மதிப்பிலான எரிபொருளை நிரப்பி மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், லாரி நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தும் முறையான கார்ப்பரேட் கார்டுகளின் (Fleet Cards) விவரங்களை ரகசியமாகப் பெற்று, அவற்றைப் பிரதி எடுத்து (Cloning) போலி கார்டுகளை உருவாக்கியுள்ளனர்.
பின்னர், இந்த போலி கார்டுகளைப் பயன்படுத்தி மற்ற லாரி ஓட்டுநர்களுக்குக் குறைந்த விலையில் எரிபொருள் நிரப்பிக் கொடுத்துள்ளனர்.
இதற்கான தொகையை ஓட்டுநர்கள் நேரடியாக மோசடியாளர்களிடம் வழங்க, அதன் கட்டணம் மட்டும் சம்பந்தப்பட்ட லாரி நிறுவனங்களின் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் திகதி மதியம் சுமார் 4:30 மணியளவில் டிக்சி சாலை மற்றும் பிரிட்டானியா சாலை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இந்த மோசடி கண்டறியப்பட்டது. அங்கு நபர் ஒருவர் லாரி ஓட்டுநர்களுக்குப் போலி கார்டுகளை வழங்குவதை ஊழியர் ஒருவர் கவனித்துக் காவல்துறையிடம் தெரிவித்தார்.
இதில் ஒரு ஓட்டுநர் 330 டொலர் மதிப்பிலான டீசலை நிரப்பியுள்ளமை தெரியவந்தது.
இது தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த பிரவீன் விஜயானந்தம் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து மடிக்கணினி, செல்போன்கள் மற்றும் கார்டு ஸ்கேனிங் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 9-ம் திகதி அட்லாண்டிக் டிரைவ் பகுதியில் உள்ள மற்றொரு எரிபொருள் நிலையத்தில் வேறொரு மோசடி நடந்தது. அங்கு நபர் ஒருவர் போலி கார்டுகளைப் பயன்படுத்தி நான்கு லாரிகளுக்கு மொத்தம் 2,233 டொலர் மதிப்பிலான எரிபொருளை நிரப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிராம்ப்டனைச் சேர்ந்த தனிசன் தனபாலசிங்கம் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு போலி கார்டுகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இருவேறு சம்பவங்கள் குறித்தும் பீல் பிராந்திய காவல்துறையின் மோசடி தடுப்புப் பிரிவு (Fraud Bureau) தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாகத் கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறையையோ அல்லது 'Crime Stoppers' அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


