TamilsGuide

வாடகைதாரர்களை வெளியேற்றத் தடை விதித்த நகரமுதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

பிரான்ஸ் சென்ட் டெனி (Saint-Denis) நகரமுதல்வரான பாலி பகாயோகோ (Bally Bagayoko), வாடகைதாரர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராகப் பிறப்பித்திருந்த உத்தரவை, நிர்வாக நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் வாடகைதாரர்களை வெளியேற்றக் கூடாது என்ற சலுகைக்காலம் (Trêve hivernale) உண்டு.

வாடகைதாரர்களை வெளியேற்றத் தடை விதித்த நகரமுதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை | Court Halts Mayor S Order Banning Tenant Evictions

இந்தச் சலுகைக்காலம் ஏப்ரல் 1-ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சென்ட் டெனி (Saint-Denis) நகரமுதல்வரான பாலி பகாயோகோ ஒரு புதிய சட்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, அக்டோபர் 31-ஆம் திகதி வரை, மாற்று இருப்பிடம் வழங்காமல் எந்தவொரு வாடகைதாரரையும் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என அவர் தடை விதித்திருந்தார். இது ஏழை எளிய மற்றும் நலிவடைந்த மக்களைக் காக்கும் ஒரு முக்கிய நகர்வு என அவர் பெருமிதம் கொண்டார்.

ஆனால், இது சட்டத்திற்குப் புறம்பானது என அரசுத் தரப்பில் (Préfecture) கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நகரமுதல்வரின் உத்தரவு வெளியான இரண்டே நாட்களில், மாகாண நிர்வாகம் Montreuil நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

நேற்று (ஏப்ரல் 14) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்ட் டெனி (Saint-Denis) நகரமுதல்வரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, நகரமுதல்வரின் உத்தரவு செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த வெளியேற்ற உத்தரவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, உள்ளூர் நகரமுதல்வர்களுக்கு சட்டப்படி அதிகாரமில்லை என்பதை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நகரமுதல்வர்களின் இத்தகைய உத்தரவுகள் பிரான்சில் முடக்கி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் Bagneux மற்றும் Gennevilliersபோன்ற நகரங்களில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமுதல்வர்கள் இதேபோன்ற வாடகைதாரர் பாதுகாப்பு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தனர்.

ஆனால், மாகாண நிர்வாகங்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் அந்த உத்தரவுகளும் நீதிமன்றங்களால் இரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment