TamilsGuide

எம்ஜிஆர் வாங்கிய அட்வான்ஸ் பணம்....

சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத்து படம் பண்ணுவீங்களா” என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேட்கிறார். ”ஆம்” என்று உறுதியாக சொல்கிறார் பந்துலு.

பெரும்பாலும் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து படத்தை இயக்குவது வழக்கம். எனவே, “அப்படியானால் எனக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுங்க” என்று எம்ஜிஆர் வாய்விட்டு கேட்கிறார். “அய்யய்யோ, இப்ப பணம் கொண்டு வரலையே” என்று பதறுகிறார் பந்துலு. “பரவாயில்லை. இருப்பதை கொடுங்க” என்று சிரிக்கிறார் எம்ஜிஆர். ஜிப்பாவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று துலாவி பார்க்கிறார் பந்துலு. உள்ளே இருந்த 101 ரூபாய்யை எம்ஜிஆருக்கு அட்வான்சாக கொடுக்கிறார். அப்புறம், காலத்தால் அழியாத ஆயிரத்தில்ஒருவன் உருவாகியது. 1965ல் படம் வெளிவந்தது. எம்ஜிஆர்-ஜெயலலிதா நடிப்பு கூட்டணியில் முதலில் உருவான படம் அதுதான்.

அந்த காலத்தில் திருச்சி ஏரியாவுக்கு மட்டும் ஒரே ஆண்டில் 5 மடங்கு லாபத்தை கொடுக்கிறது ஆயிரத்தில் ஒருவன். மற்ற ஏரியாகளுக்கு எவ்வளவு லாபம் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ்சினிமாவின் பக்கா கமர்ஷியல் படங்களில் ஒன்றாக ஆயிரத்தில் ஒருவன் இன்றும் பேசப்படுகிறது. 1974ல் பந்துலு மறைகிறார். 1987ல் எம்ஜிஆர் விண்ணுலகம் செல்கிறார்.

சமீபத்தில் பந்துலு மகளும், பிரபல ஒளிப்பதிவாளருமான விஜயலட்சுமி எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டில் ஒரு படப்பிடிப்பை நடத்துகிறார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் எம்ஜிஆரின் உறவினர்கள் ஒரு கவரை கொடுக்கிறார்கள். அதில் ஆயிரத்தில் ஒருவன் என்று எண்ணிலும், எழுத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் 20 ரூபாய் நோட்டுகள் ஐந்தும், ஒரு 1 ரூபாய் நோட்டும் இருக்கிறது. விஜயலட்சுமிக்கு புரியவில்லை. “உங்க அப்பா ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆருக்கு கொடுத்த அட்வான்ஸ் இது. இந்த பணத்தை செலவழிக்காமல் வீட்டு லாக்கரில் வைத்து இருந்தார் எம்ஜிஆர். பிற்காலத்தில் அதை நாங்கள் கண்டுபிடித்தோம். உங்க அப்பா கொடுத்த பணம். உங்களுக்கே இது சொந்தம்” என்று அந்த பணத்தை கொடுக்கிறார்கள் விஜயலட்சுமியிடம் கொடுக்கிறார்கள் எம்ஜிஆரின் உறவினர்கள். கண் கலங்குகிறார் விஜயலட்சுமி. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆர் வாங்கிய அட்வான்ஸ் பணம் ரூ 101தான் இது….

காலத்தால் அழியாமல், கரையாமல் இன்னமும் இந்த நோட்டுகள் அப்படியே இன்னமும் விஜயலட்சுமி வசம் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் விழாவில் இந்த தகவலை சொல்லி, இந்த 101ரூபாய்யை காண்பித்தார் பந்துலு மகள் விஜயலட்சுமி.
 

Leave a comment

Comment