இலங்கைப் பூர்வீகமாகக் கொண்ட, நாடகாசிரியர் சக்திதரன் சர்வதேச இலக்கிய உலகில் முக்கியமான குரலாக உயர்ந்துள்ளார்.
இலங்கை
இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில் உருவான தமிழர் புலம்பெயர் வாழ்க்கையின் சிக்கல்களையும், தலைமுறைகளைத் தாண்டி பரவும் நினைவுகள், இழப்புகள் மற்றும் அடையாளப் போராட்டங்களையும் ஆழமாகச் சித்தரித்ததற்காக, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கைப் பூர்வீகமாகக் கொண்ட, நாடகாசிரியர் சக்திதரன் சர்வதேச இலக்கிய உலகில் முக்கியமான குரலாக உயர்ந்துள்ளார்.
அவரது இந்த படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கதை சொல்லல் பாணியை அங்கீகரிக்கும் வகையில், உலகின் மிகுந்த மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றான Windham-Campbell Prize (நாடகம் பிரிவு) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 175,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் இந்த விருது, எழுத்தாளர்களுக்கு பொருளாதார சுதந்திரத்தையும், தமது படைப்பாற்றலை நிதி நெருக்கடியின்றி விரிவாக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
உலகளவில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களை அடையாளப்படுத்தும் இந்த அங்கீகாரம், இலக்கிய உலகில் மிகுந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.
சக்திதரன் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் Counting and Cracking, The Jungle and the Sea போன்ற நாடகங்கள் முக்கியமானவை. குறிப்பாக Counting and Cracking நாடகம், ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் பல தலைமுறைகள் வழியாகப் பரவும் பூர்வீகவரலாறு, அரசியல் குழப்பங்கள் மற்றும் புலம்பெயர்ந்த வாழ்க்கையில் எதிர் கொள்ளும் வடிவங்கள் என்பவற்றை ஆழமாக எடுத்துரைக்கும் படைப்பாகப் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது.
அவரது எழுத்தின் முக்கிய தனிச்சிறப்பு — தனிப்பட்ட குடும்பக் கதைகளின் வழியாக, அரசியல் மற்றும் சமூக வரலாற்றை வெளிப்படுத்தும் திறன். போரால் சிதைந்த நினைவுகள், மொழி மற்றும் கலாச்சார இடம்பெயர்வு, தலைமுறைகளுக்கிடையேயான மனப் போராட்டங்கள் ஆகியவற்றை மனிதநேய பார்வையில் பதிவு செய்வதே அவரது படைப்புகளின் மையமாகும்.
இவ்வாறான ஆழமான மனித அனுபவங்களையும், புலம்பெயர் தமிழர் வாழ்வியலின் பல அடுக்குகளையும் வெளிப்படுத்தியதற்காகவே, சக்திதரன் இந்த ஆண்டுக்கான Windham-Campbell Prize விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அங்கீகாரம், இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில் உருவான தமிழர் அனுபவங்களை உலக இலக்கிய மேடையில் வலுவாக பதிவு செய்யும் ஒரு முக்கிய தருணமாகவும், ஈழத் தமிழ்ச் சமூகத்தின் குரல் சர்வதேச அளவில் மேலும் செல்வதற்கான முன்னேற்றமாகவும் கொள்ளலாம்.
அவர் Kurinji என்ற கலை அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் செயற்படுகிறார் என்பதும், நாடகம், திரைப்படம், இலக்கியம் மற்றும் இசை ஆகிய பல துறைகளில் இயங்கும் பல்துறை கலைஞராக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
வாசுகி குமாரதாசன்























