TamilsGuide

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

29 ஆண்டுகள்
இந்த பூமிக்கு வந்துபோன
ஒரு கந்தர்வன்
இசைப்பாட்டுக்குச்
சொல்நீதி செய்தவன்
திரைப்பாட்டைச்
சமூக இலக்கியமாய்
நிறுவப் பார்த்தவன்
சங்க இலக்கியத்தின்
சொல்லாட்சிபோல
ஒரு சொல் உருவிப்
பிறிதொரு சொல்
பெய்ய முடியாத
செய்ய செய்யுள் செய்தவன்
முறைசார் கல்வி பயிலாமல்
தரைசார் கல்வி பயின்று
தமிழ்க்கவி ஆனவன்
ஒரு நதி
மலையில் பிறந்தாலும்
மருத நிலத்துக்கே
பெரிதும் பயன்படுமாறுபோல
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிறந்தும்
திராவிட இயக்கத்துக்கே
செழுமை சேர்த்தவன்
“தூங்காதே தம்பி, திருடாதே பாப்பா
சின்னப் பயலே, குறுக்கு வழியில்
வீடு நோக்கி, குட்டி ஆடு
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆடைகட்டி வந்த நிலவோ
சின்னஞ்சிறு கண்மலர்”
அவன் பாடல்களில்
இசை கழிந்தாலும்
தமிழ் கழியாது
2030 நூற்றாண்டு விழா
எடுப்பேன்
பெருந்திரள் கூட்டி
அவன் பெருமை சொல்வேன்;
பேருண்மை பேசுவேன்
இன்று அவன் பிறந்தநாள்;
திரைத் தமிழுக்குச் சிறந்தநாள்.

கவிப்பேரரசு வைரமுத்து
 

Leave a comment

Comment