• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்!  - M G Ramachandran

சினிமா

வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கலாசாரக் குழுவினருள் தமிழர்களுக்கு ஏன் இடமளிப்பதில்லை என்றெல்லாம் பலகாலமாகவே இந்திய அரசினரிடம் கேட்டு வந்தோம்.

தந்திகள் கொடுத்தும் கேட்டோம். கடிதங்கள் அனுப்பியும் வினவினோம். நல்ல தரமுள்ள பல்வேறு பத்திரிகைகள் கூட இந்தக் கருத்தை வற்புறுத்தின. அவைகளுக்கெல்லாம் வெற்றியாக, உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானதெனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ள அமெரிக்க அரசாங்கம், ஒரு தமிழ் மகனை, அதிலும் ஒரு நாடக சினிமா நடிப்புக் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப் படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அதனைப்பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது? அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது? அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது?

எதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள்! அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

முன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம்.

அதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விசேஷமாக விழா நடத்தினோம்.

இனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.

தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்! அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்”

- M G Ramachandran

Leave a Reply