TamilsGuide

தானாக கிடைத்தால் தான் அது பட்டம் தனக்கு தானே புகழ்வது தம்பட்டம்  - எம்ஜிஆர் 

தானாக கிடைத்தால் தான் அது பட்டம் தனக்கு தானே புகழ்வது தம்பட்டம் என்ற கொள்கையை எம்ஜிஆர் தனது வாழ்நாளில் இறுதிவரை கடைபிடித்தார்.
தாய்க்குலம் என்று உளமார அழைத்து
ஒட்டுமொத்த பெண்களின் மனதை கவர்ந்தவராகவும் அவர்களின் நன்மதிப்பை பெற்றவராகவும் அவர்களாலேயே முதலமைச்சர் அளவுக்கு உயர்ந்து மக்கள் தலைவராக புரட்சி தலைவராக எம்.ஜி.ஆர் விளங்குவதற்கு முக்கிய காரணம் அவரிடத்தில் இயல்பாக இருந்த அன்பும் ஆர்பாட்டம் இல்லாத அடக்கமும் பெண்கள்பால் அவர் வைத்திருந்த மரியாதையும் ஆகும்.
எம்.ஜி.ஆர் தன்னுடைய படங்களில் அன்பான அண்ணனாக நடித்திருப்பதை பார்த்து இளம்பெண்கள் தனக்கு இப்படி ஒரு அண்ணன் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்க வைத்திருப்பார். இதற்கு முக்கிய காரணமே அவர் மற்ற படங்களில் மாதிரி தங்கைகள் துன்பம் அனுபவிக்கும் காட்சிகளை இல்லாத அளவுக்கு தவிர்த்ததுதான்.
மேலும் எம்.ஜி.ஆர். படங்களில் அவர் தங்கைகளை வாழவைப்பார் மானத்தை காப்பார் அவர்களுடைய மகிழ்ச்சிக்காக சம்பாதிப்பார்.
எம்.ஜி.ஆருடைய படங்களில் தங்கை கதாபாத்திரங்கள் சிறப்பிடம் பெற்ற படங்கள்: என் தங்கை 1952 அரசிளங்குமரி 1961 காஞ்சித்தலைவன் 1963 பணக்கார குடும்பம் 1964 தனிப்பிறவி1966
தேர்த்திருவிழா 1968 கணவன் 1968 என் அண்ணன்1970 எங்கள் தங்கம் 1970 சங்கே முழங்கு 1972 நான் ஏன் பிறந்தேன் 1972 இதயவீணை 1972 நினைத்ததை முடிப்பவன்1975 ஆகியன திரைப்படங்களை கூறலாம்.

எம்.ஜி.ஆரின் தங்கை என்றாலே அவள் ஒரு முன்மாதிரியான இளம் பெண்ணாகவே தன் படத்தில் அமைவதைத்தான் அவர் பெரும்பாலும் விரும்பினார். பொதுவாக எம்.ஜி.ஆர் படத்தில் கொலைகாரி கொள்ளைக்காரி போன்றவர்களை கெட்ட குணங்களும் கேவலமான எண்ணங்களும் கொண்ட பெண்களை அதிகம் பார்க்க இயலாது. இதுவும் அவர் தாய்மார்களின் மனதில் இடம்பிடிக்க முக்கிய காரணமாகும்.
எம்.ஜி.ஆர். படங்களில் வரும் தங்கைகள் விதவை கிடையாது. வாழாவெட்டியாக வந்திருந்தாலும் எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்டு முயன்று அவர்களை கணவனோடு வாழ வைத்து விடுவார்.
எனவே ஒரு குடும்பத்தில் தன்னை நம்பியிருக்கும் தாயையும் தங்கையையும் காப்பாற்ற வேண்டியது அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டியது ஒரு ஆணின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்பதை அவர் தன் படங்களில் ஆழமாக வலியுறுத்தினார்.
ரசிகர்கள் எம்.ஜி.ஆரை போன்ற அண்ணன் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை அவரது படங்கள் உண்டாக்கின.
தாய்மை பெண்மை தங்கை தோழி போன்ற உறவுகளுக்கு உணர்வுப்பூர்வமான அர்த்தமுள்ள காட்சிகளும் அதற்கு பொருத்தமான ஆண்மகனாக எம்ஜிஆரும் அவரது பெரும்பாலான படங்களில் இருந்தது.
குறிப்பாக பெண்களை இழிவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வெகுண்டு எழுந்து பழிவாங்கும் வீரமும் அதேசமயம் அன்பிற்கும் பொதுநலனுக்கும் அடங்கி பணிந்து நடக்கும் தீரமும் சினிமா அரசியல் இரண்டிலும் கடைபிடித்ததால் தான் அன்றும் இன்றும் என்றும் பெண்கள் மதிக்கும் மனிதராக விளங்குகிறார்

 

இராம ஸ்ரீநிவாஸன்
 

Leave a comment

Comment