TamilsGuide

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி

மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான புதிய நடைமுறை குறித்து இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் உண்மையான மற்றும் நியாயமான செலவுகளை மட்டுமே இனிவரும் மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ளப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது விநியோகச் சிக்கல்கள் காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் மற்றும் ஏனைய நியாயமற்ற செலவுகளுக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் பின்வரும் செலவுகளை நீக்குவதற்கு ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது:

அதன்படி, நிலக்கரி நெருக்கடியால் ஏற்பட்ட தேவையற்ற மேலதிக செலவுகள், மின்சார சபையினால் முன்வைக்கப்படும் ஏனைய நியாயமற்ற நிதி கோரிக்கைகள் என்பன இதிலடங்குகின்றன.

மின் நுகர்வோர் மீது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்றுவதைத் தவிர்க்கும் நோக்கோடும், மின்சாரத் துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment