TamilsGuide

ஈரானுடன் மோதல் - ஐரோப்பாவில் விமான சேவைகள் முடங்கும் அபாயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் விமான போக்குவரத்துகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

குறிப்பாக, ஐரோப்பிய விமான நிலையங்களுக்குத் தேவையான விமான எரிபொருளில் சுமார் 30 முதல் 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், இன்னும் மூன்று வாரங்களுக்குள் ஐரோப்பாவில் “முறையான எரிபொருள் தட்டுப்பாடு” (Systemic Shortage) ஏற்படும் என ஐரோப்பிய விமான நிலையங்களின் கூட்டமைப்பு (ACI Europe) எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) எழுதப்பட்டுள்ள கடிதத்தில், எரிபொருள் விநியோகம் சீராகவில்லை என்றால் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில் வரவிருக்கும் கோடைக்கால விடுமுறைப் பயணங்கள் (Half-term Holidays) பெரும் கேள்விக்குறியாகியுள்ளன.

ஏற்கனவே இத்தாலியின் பிருந்திசி (Brindisi) விமான நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்ட நிலையில், மிலன், வெனிஸ் மற்றும் போலோக்னா போன்ற நகரங்களில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரயான் ஏர் (Ryanair) போன்ற முன்னணி விமான நிறுவனங்கள், நிலைமை சீராகவில்லை என்றால் மே மாத இறுதியில் தங்களது 25 சதவீத விமானச் சேவைகளை ரத்து செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளன.

பிரிட்டனைப் பொறுத்தவரை, அதன் 25 சதவீத விமான எரிபொருள் தேவையை குவைத் நாட்டிலிருந்தே பூர்த்தி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் இந்தக் கப்பல்கள் வர வேண்டும் என்பதால், ஐரோப்பாவிலேயே அதிக பாதிப்புக்குள்ளாகும் நாடாகப் பிரிட்டன் இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

லண்டன் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதல் விமான ரத்து நடவடிக்கைகள் தொடங்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எரிபொருள் விலை ஏற்கனவே இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதால், விமானக் கட்டணங்களும் விண்ணைத் தொட்டுள்ளன.

உலக அரசியல் இந்த நெருக்கடிக்குத் தீர்வுகாண ஐரோப்பிய ஒன்றியம் மாற்று எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இருப்பினும், ரஷ்யா மீதான தடைகள் நீடிப்பதாலும், ஆசிய நாடுகளில் இருந்து எரிபொருளைக் கொண்டுவர நீண்ட காலம் பிடிக்கும் என்பதாலும் உடனடித் தீர்வு காண்பது கடினமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஈடுபட்டுள்ள போதிலும், போர்ச் சூழல் தணிந்தால் மட்டுமே விமானத் துறை இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தட்டுப்பாடு நீடித்தால், 2026-ம் ஆண்டு கோடைக்காலம் ஐரோப்பிய சுற்றுலாத் துறைக்கு ஒரு “கருப்பு ஆண்டாக” மாறக்கூடும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
 

Leave a comment

Comment